காண்போரின் நெஞ்சை மயக்கும் வகையில் ஆசிரியரிடம் மனதார மன்னிப்பு கோரும் மழலை மனம் மாறாத பள்ளி மாணவர் ஒருவரின் வீடியோ இப்போது சமூக வலைதள பக்கங்களில் செம வைரலாக பரவி வருகிறது. அதோடு மேலும் நெட்டிசன்கள் அதற்கு கலவையான விமர்சனங்களையும் வழங்கியுள்ளனர்.
இணைய வெளியில் தினந்தோறும் லட்ச கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தை பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் அமைந்துள்ளது இது.
மழலையர் பள்ளி ஒன்றில் மாணவர் தனது ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறார். அதோடு இந்த தவறை இனி செய்ய மாட்டேன் என உறுதியும் அளிக்கிறார். ஆனால் அந்த ஆசிரியரோ அதற்கு, “நீ இப்படித்தான் சொல்வாய். ஆனால் அதே தவறை நீ மீண்டும் செய்வாய்” என்கிறார் வேண்டுமென்றே. ஆனால், அந்த மாணவரோ தொடர்ந்து தனது மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டே உள்ளார். இறுதியில் அந்த மன்னிப்பை ஆசிரியர் ஏற்றதும் அன்பு முத்தங்களை பரிமாறுகிறார் அந்த மாணவர். பதிலுக்கு அந்த ஆசிரியையும் அந்த மழலைக்கு முத்தம் கொடுக்கிறார்.
சுமார் 45 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர். “எனது பள்ளி நாட்களில் இப்படியொரு இனிதான நினைவு இல்லாமல் போனது ஏனோ?, ஆசிரியரின் அக்கறை - குழந்தையின் அன்பு, இது உண்மையா? அல்லது வைரலாக வேண்டும் என்ற நோக்கில் கிரியேட் செய்ததா?, தாயுள்ளம் கொண்ட அந்த ஆசிரியரை குழந்தை ஒருபோதும் மறக்காது” என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.