குங்கும சீனிவாசன் 
வாழ்வியல்

10,000 கி.மீ... பைக்கில் லடாக் பயணம்: செவித்திறன் குறைந்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞரின் சாதனை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: 10,000 கி.மீ. தூரம் தனியாக பயணம் செய்து, பல்வேறு சவால்களையும், சிரமங்களை சந்தித்து லடாக் சென்று சாதனை நிகழ்த்தியுள்ளார் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

செவித்திறன் குறைந்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞர் குங்கும சீனிவாசன். இவர் 10,000 கி.மீ. தூரத்துக்கும் மேலாக தனியாக மோட்டார் சைக்கிள் பயணம் செய்து காஷ்மீர் தாண்டி லடாக் பகுதியில் உள்ள உம்ல்லிங் லா என்ற இடத்தை அடைந்து சாதனைப் படைத்துள்ளார். இவர், கடந்த ஜூலை 3ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலை பாதை வழியாக லடாக் பகுதியை 24 நாட்களில் சென்றடைந்துள்ளார். இந்த இடம் உலகிலேயே 19,024 அடிக்கு மேலான உயரமான மிகவும் ஆபத்தான பாதையைக் கொண்டது. பாறைகளும், பள்ளங்களும், நீரோடைகளும் மிகுந்த குளிரான இடமாகும்.

யாருடைய துணையுமின்றி இந்த பயணத்தைத் திட்டமிட்டார். 16 மாநிலங்களைக் கடந்து திரும்பி வரும்போது நாக்பூர், ஹைதராபாத், சென்னை வழியாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளார். இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி செவித்திறன் குறைவானவர்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நம்பிக்கையை ஊட்டவும் இந்தப் பயணம் மேற்கொண்டதாக இளைஞர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மாற்று திறனாளியாக அவர் மோட்டார் சைக்கிளில் 19,024 அடி உயரத்தை அடைந்ததை அங்கீகரித்து, அவர் நிகழ்த்திய இந்த சாதனையை அறிந்து ‘Nobel world records’ என்ற அமைப்பு சாதனை விருது வழங்கியுள்ளது. மேலும், இவருக்கு இந்நிறுவனம் வேலை வாய்ப்பும் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT