எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். (படம்: ஜெ.மனோகரன்) 
வாழ்வியல்

“நாவல் படிப்பதால் உங்கள் செயல், சிந்தனையில் மாற்றம் ஏற்படும்” - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

க.சக்திவேல்

கோவை: ஒரு நல்ல நாவலை படிக்கும் போது உங்கள் செயல், சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படும் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில், இன்று (ஜூலை 25) நடைபெற்ற நிகழ்ச்சியில், 'ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது.

“இப்போது உள்ள உலகம் நாவல் உலகம். வெளிநாடுகளில் நாவல்கள் படிப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். வெளிநாடுகளில் நாவல்கள் கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் விற்கின்றன என்பது ஆச்சரியமாக உள்ளது.

ஆனால் நாம் நாவல்களை படிப்பதிலிருந்து விலகிப் போகிறோமோ என்ற கேள்வி எழுகிறது. ஒருவர் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் போது, அவருடைய உடலில் பொலிவு ஏற்படும். அதுபோல, ஒரு நல்ல நாவலை படிக்கும் போது உங்கள் செயல், சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படும்.

புதிய உலகத்துக்குள் நுழைவதற்கு புத்தகம் படிப்பது உதவியாக இருக்கும். நாவல்கள், பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் உங்களை அழைத்து செல்லும். அவ்வாறு அழைத்து சென்று அப்போது வாழ்ந்த மக்களை பற்றியும், சுக துக்கங்களில் பங்கு கொள்ள அது உதவி செய்யும். அவர்களுக்காக உங்களை கண்ணீர் வடிக்க செய்யவும் முடியும் என்றால் அதை நாவல் வாசிப்பதால் மட்டுமே முடியும். புத்தகங்கள் வழியாக பல நூற்றாண்டுகளில் நீங்கள் வாழ முடியும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT