தினமும் காலைப் பொழுதைக் காபியுடன் ஆரம்பிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்குத்தான்.
டெத் விஷ் காபி (Death Wish Coffee) எனும் ஒரு காபி அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ளது. உலகிலேயே ஆபத்தான காபி எனக் கருதப்படும் இந்தக் காபியே, உலகின் மிகவும் ஸ்ட்ராங்கான காபியும்கூட. இதன் பெயரில் இருக்கும் ஆபத்து இந்த காபியிலும் இருக்கிறது. காரணம் அதில் அந்த அளவு அதிகமாக காஃபின் கலந்திருக்கிறது.
அடிமையாக்கும் காஃபின்
காஃபின் என்பது ஒரு போதைப் பொருள். இந்த காஃபினே நம்மைக் காபிக்கு அடிமையாக்குகிறது. ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் காஃபின் மட்டுமே ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறார்களாக இருந்தால் 100 மில்லி கிராம் மட்டுமே. நாம் குடிக்கும் காபியில் இருக்கும் காஃபினின் அளவு இதற்குள் இருந்தால் பிரச்சினை இல்லை. காஃப்னின் அளவு இந்த இந்த அளவை மீறினால் அது உடலுக்குக் கேட்டை விளைவிக்கும். டெத் விஷ் காபியில், நாம் வழக்கமாகக் குடிக்கும் காபியில் இருப்பதைவிட 200 சதவீதம் அதிகமாக காஃபின் உள்ளது.
பறிபோகும் தூக்கம்
சாதாரணமாக நாம் குடிக்கும் காபி அராபிகா (Arabica) என்னும் கொட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த டெத் விஷ் காபியோ அராபிகா, ரோபஸ்டா (Robusta) ஆகிய இரண்டு காபி கொட்டைகளைக் கலந்து தயாரிக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றப்படி, இதைக் குடிப்பதால் மரணம் ஏற்படுமா என்றால், கண்டிப்பாக மரணம் ஏற்படாது. அதே சமயம், இதைக் குடித்தால் தூக்கம் முற்றிலும் பறிபோய்விடும். ஆம், இந்த காபியில் இருக்கும் அதிகப்படியான காஃபின் நமது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதால், இந்த காபியைக் கொஞ்சமாகக் குடித்தால்கூட மூன்று நாட்களுக்குத் தூக்கம் வராது.
ஆபத்தை உணர்வோம்
அமெரிக்காவில் இருக்கும் இந்த காபி நிறுவனம் 2012ஆம் ஆண்டு மைக் பிரவுன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை நிறுவனம் நியூயார்க்கில் உள்ளது. இந்த காபி பெரும்பாலும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. நியூயார்க்கில் சில சூப்பர் மார்கெட்களிலும் கிடைக்கிறது. உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த காபியைக் குடிப்பது நல்லதல்ல என்பதால், சில நாடுகளில் இந்த காபிக்குத் தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த காபி இன்னும் அறிமுகமாகவில்லை. இருப்பினும், வரும் முன்னரே, அதன் ஆபத்தைத் தெரிந்துகொள்வது நல்லதுதானே.