வாழ்வியல்

வித்தியாசமாக ‘கூவி’ பழம் விற்கும் வியாபாரி: இணையத்தில் வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

கவனம் ஈர்க்கும் வகையில் வேடிக்கையான சைகைகள் மூலம் ‘கூவிக் கூவி’ பழம் விற்கும் வியாபாரியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரெட்டிட் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அது பரவலான வியூஸ்களை பெற்றுள்ளது.

வழக்கமாக சாலை ஓரங்களில் வியாபாரப் பணியை கவனித்து வரும் வியாபாரிகள் ஒரே குரலாக ‘கூவிக் கூவி’ விற்பனை செய்வார்கள். ‘எது எடுத்தாலும் 10 ரூபா’, ‘பொரி உருண்டை’, ‘பாய்’ என பல்வேறு பொருட்களை வியாபாரிகள் உரத்தக் குரலில் விற்பனை செய்வதை நாம் பார்த்திருப்போம். இப்போது வியாபாரிகள் கொஞ்சம் ஸ்மார்டாக மாறிவிட்டனர். ஒலிபெருக்கி உதவியோடு மெமரி கார்டு மூலம் ரிப்பீட் மோடில் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை ஒலிக்கச் செய்கின்றனர். இந்த ஸ்மார்ட் வியாபாரிகளிடம் இருந்து கொஞ்சம் மாறுபட்டு நிற்கிறார் அந்த பழ வியாபாரி. அதற்கு சான்று பின்வரும் அந்த வாடிக்கையாளரின் பதிவு தான்.

"எனது பழ வியாபாரிக்கு பழங்கள் விற்பனையின் மீது இந்த அளவுக்கு ஆர்வம் இல்லையெனில், எனக்கு அது தேவையில்லை" என இந்த வீடியோவை பகிர்ந்த பயனர் கேப்ஷன் கொடுத்துள்ளார். சுமார் 78,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவிற்கு அப்-ஓட் (Upvote) வழங்கியுள்ளனர். சுமார் 1600 கமெண்டுகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. 3-ஆம் தேதி அன்று இந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் பழ வியாபாரி ஒருவர் மிகவும் மும்முரமாக பப்பாளி மற்றும் தர்பூசணி பழங்களை மிகவும் ஸ்டைலாக நறுக்குகிறார். பின்னர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்த பழங்கள் குறித்து விவரிக்கிறார். "பாருங்க… நல்லா பாருங்க… இந்த பழங்கள் நல்லா பழுத்திருக்கு" என உரத்த குரலில் பேசுகிறார். அவர் தள்ளுவண்டியில் பழங்களை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இருந்தாலும் அது எந்த இடம் என்ற விவரம் எதுவும் பயனர் குறிப்பிடவில்லை. இந்த வீடியோவில் அந்த பழ வியாபாரி இந்தி மொழியில் பேசி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கச்சா பதாம் பாடல் மூலம் வேர்க்கடலை வியாபாரி பூபன் பத்யாகர் பிரபலமானார். அவரது பாடல் ரீமேக் வடிவில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பழ வியாபாரி கச்சா பதாம் அளவுக்கு இல்லை என்றாலும் தனக்கு தெரிந்த வியாபார யுக்தியின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

SCROLL FOR NEXT