வாழ்வியல்

உடல் பருமனால் ஏற்படும் மூட்டுவலியைக் குறைக்க சில வழிகள்

செய்திப்பிரிவு

உடல் பருமன் பொதுவாக நீரிழிவு, இதய நோய்களுடன் தொடர்புடையதாகவே கருதப்படுகிறது. இருப்பினும், எலும்பு ஆரோக்கியம், மூட்டு ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் உடல்பருமனுக்கும் இருக்கும் தொடர்பை நாம் மறுக்க முடியாது.

உடல் எடையை எலும்புகளால் தாங்க முடியவில்லை என்று ஒருவர் உணர ஆரம்பிப்பதே, அவருடைய உடல் பருமனாக இருப்பதற்கான முதல் அறிகுறி. அந்தச் சிக்கலைச் சமாளிக்க சில வழிகள்:

சீருணவு: எடையைக் குறைக்க அதிகம் பின்பற்றப்படும் வழி இது. ஒருவர் ஒவ்வொரு நாளும் அவருடைய உடலுக்குத் தேவைப்படுதைவிடக் குறைவான கலோரிகளைக் கொண்ட உணவை உட்கொள்வதன் மூலமும், சீரான உணவைப் பராமரிப்பதன் மூலமும் எடையைக் குறைக்க முடியும்.

நிறைய பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நொறுக்குத் தீனி சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும்.

உடல் பருமனைத் தவிர்க்கச் சர்க்கரை, குளிர்பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உடல் செயல்பாடுகள்: உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஜாகிங், பளு தூக்குதல் உள்ளிட்டவை உடல் செயல்பாடுகளில் அடங்கும். ஆனால் உடல் பருமனாக உள்ளவர்கள் எடையைத் தூக்குவது, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்வது கடினமாக இருக்கலாம்.

இந்த வகை உடல் செயல்பாடுகள் மூட்டுகளில் அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி, நீச்சல் ஆகியவற்றுடன் உடல் செயல்பாடுகளை முதலில் தொடங்குவது நல்லது.

மருத்துவரின் ஆலோசனை: ஒரு நபரின் ஹார்மோன் சமநிலையின்மை அல்லது வளர்சிதை மாற்றம் நடைபெறும் வகை போன்றவற்றின் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கலாம்.

ஒருவர் தன் உடலின் நிலையையும், ஆரோக்கியத்தையும் தொடர்ந்து கண்காணித்துவர வேண்டும். தேவைப்படும்போது மருத்துவரிடம் வழிகாட்டுதலையும் தகுந்த சிகிச்சையையும் பெற்றாக வேண்டும்.

> இது,எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், சண்முகசுந்தரம் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT