குறித்த நேரத்தில் நடைமேடைக்கு வந்திருந்த அந்த விரைவு ரயில் "ஹூஸ்... ஹூஸ்..." என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அடுத்த நீண்ட பெரும் ஓட்டத்திற்காக தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தது. பயணம் செய்யவிருந்த பயணிகள் தங்களுக்கான பெட்டிகளைத் தேடி ஏறிக் கொண்டிருந்தனர். நானும் முன்பதிவு செய்திருந்த பெட்டியில் ஏறி எனது இருக்கையைத் தேடினேன்.
எனது ஜன்னலோர இருக்கையில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்து, தன்னை வழியனுப்ப வந்த வெளியே நின்ற பாட்டியும் தன்னுடன் ரயிலில் வர வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான். இந்தப் பயணம் கொஞ்சம் சுவரஸ்யமாக இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு அந்தப் பயணம் ஏமாற்றம் தரப்போகிறது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.
நடைமேடையை விட்டுக் கிளம்பும் வரை வழியனுப்ப வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள், வண்டி ஓடத் தொடங்கியதும் தங்களின் இருக்கைகளில் அமர்ந்து அலைப்பேசியில் மூழ்கத் தொடங்கினர். எங்கோ தூரத்தில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள், யாரும் பக்கத்திருப்பவர்களுடன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை, பேசவும் முயற்சிக்கவில்லை. என் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து பாட்டியும் தன்னுடன் வர வேண்டும் என்று அடம்பிடித்தச் சிறுவனைப் பார்த்தேன். தன் அம்மாவின் அலைபேசியில் ஏதோ ஒரு வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.
நான் எனது பையில் இருந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன். கதைகளில் பயணித்துக் கொண்டிருந்த என்னை "ப்ரோ" என்ற குரல் புத்தகத்தில் இருந்து வெளியே ஈர்த்தது. பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்து விட்டது என்று புத்தகத்தை மூடிய எனக்கு "இந்த சார்ஜரை அந்த ப்ளக் பாயிண்டில் கனெக்ட் பண்ண முடியுமா?" என்ற வேண்டுகோள் ஓங்கி அறைந்து உட்கார வைத்தது. அதற்கு பிறகு பேசியவர்களும் மொபைல் சார்ஜ் போடுவதற்காக மட்டுமே பேசிக் கொண்டார்கள்.
என் மனம் பத்து வருடங்களுக்கு முன்னால் வேலை தேடி ரயிலில் வந்த நாட்களை நினைத்துப் பார்த்தது. அப்போதும் இதுபோன்ற ரயில் பயணம் ஒன்றில் ஒரு மொழிபெயர்ப்பு காமிக்ஸ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் வந்த வெளிநாட்டுக் கதாநாயகர்களுடன் கனடா கானகங்களில் பயணித்துக் கொண்டிருந்த என்னை ஒரு ஜோடிக் கண்கள் உற்றுபார்க்கும் குறுகுறுப்பு ஏற்பட சட்டென்று புத்தகத்தை இறக்கிப் பார்த்தேன். எனது எதிரில் இருந்த 50-களை நெருங்கிக் கொண்டிருந்த ஒருவர் என்கையில் இருந்த புத்தகத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார். நான் இயல்பாக புத்தகத்தை அவரிடம் நீட்ட, ஆசையாக அதை வாங்கி பார்த்தவர் காமிக்ஸ் பற்றி பேசத் தொடங்கினார். அருகில் இருந்த தன் மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தவர், எங்கள் உரையாடல்களில் அவரையும் இணைத்துக் கொண்டார்.
புத்தகங்களில் தொடங்கிய எங்களின் பேச்சு அவர்கள் குழந்தைகளின் படிப்பு, எனது படிப்பு எதிர்காலம், திருமணம் அதற்கான அவர்களின் அறிவுரை என குடும்ப உறுப்பினர்கள் போல உறவாடத் தொடங்கியது. சாப்பிடும்போது கூட என் அம்மா செய்து கொடுத்த புளியோதரையும் அவர்கள் செய்து எடுத்துவந்திருந்த சப்பாத்தி தக்காளி தொக்கும் பறிமாறிக் கொள்ளப்பட்டன. எங்களைப் போலவே அந்தப் பெட்டியில் இருந்த எல்லோருக்குள்ளும் அது மாதிரியான சிநேகம் ஏற்பட்டிருந்தது.
அப்போதைய ரயில் பயணங்கள் நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுத்தன. ரயில் ஊடறுத்து ஓடிய ஊர்களின் தட்பவெப்பம், கலாச்சாரம், வாழ்க்கை முறை என சொந்த ஊரை விட்டு வெளியேறி வருபவர்களுக்கு புதிய செய்திகளையும் உறவுகளையும் உருவாக்கித் தந்தன.
வெளியூரில் படிக்கச் செல்லும் மகளைத் தனியாக அனுப்பும் பெற்றோர்கள், வெளியூரில் வேலை பார்க்கும் கணவனைப் பார்க்க வந்த மனைவியைத் திரும்பி தனியாக ஊருக்கு அனுப்பி வைக்கும் கணவன் என எல்லோரும் அண்ணே ஸ்டேஷன் வந்ததும் உங்க தங்கச்சிய கொஞ்சம் பார்த்து இறக்கி விட்டுருங்கண்ணே என்றும், பொண்ண கொஞ்சம் பார்த்துக்கோங்கையா என்றும் புதிய உறவுகளை உருவாக்கி உடன் பயணிக்கும் சக மனிதர்களை நம்பி ஒப்படைத்துச் சென்றனர். அவைகள் எல்லாம் இப்போது பழங்கனவாகிப் போனது. போன்ல சார்ஜ் இருக்குல்லா, ஏதாவது பிரச்சினைனா போன் பண்ணு யாரும் பேசினா நீ பேசாத என்ற அறிவுரைகளாக மாறிவிட்டது.
இன்று இது எதுவுமே ரயில் பயணங்களில் இல்லை. வீட்டில் அலுவலகத்தில், பேருந்து பயணத்தில் என எல்லா இடங்களிலும் ஸ்மார்ட் போன் வேலிகள் போட்டுக்கொள்ளும் மனிதர்கள் நீண்ட தூர ரயில் பயணங்களிலும் அந்த வேலியை போடத் தொடங்கி விட்டார்கள். தொலைதூரப் பயணம் போகும்போது தேவையான பொருள்களை எடுத்தவைத்துக் கொள்ளச் சொல்லும் போது மறக்காமல் 4 படங்களை டவுன்லோடு பண்ணிக்கோ ட்ராவல்ல பார்க்கலாம் எனச் சொல்வதும் இப்போது வாடிக்கையாகிவிட்டது.
ஸ்மார்ட்போன்களின் வசதிகள் மனிதன் சமூகத்துடன் உறவாட வேண்டிய இடங்களிலும் அவனைத் தனிமைப் படுத்தி வைத்திருக்கின்றன. மனிதனின் மீது அதீத ஆதிக்கம் செலுத்தும் அந்த ஸ்மார்ட்போன் மேனியா இன்று ரயில் சிநேகங்களையும் களவாடி விட்டிருக்கின்றன.
உங்கள் அனுபவங்களை கருத்துப் பகுதியில் பகிரலாமே..!