வாழ்வியல்

சர்வதேச தேநீர் தினம் | சூடான தேநீரும்; ஐந்து ஆரோக்கிய நன்மைகளும்

Ellusamy Karthik

இன்று (மே 21) சர்வதேச தேநீர் தினம். உள்ளத்தையும், உடலையும் உற்சாகமாக வைக்கின்ற உற்சாக பானம் தான் தேநீர். உள்ளூர் தொடங்கி உலக லெவலில் பிரசித்தி பெற்ற பானம் இது. சர்வதேச தேநீர் தினத்தன்று சூடான தேநீரும் அதன் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.

சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் காலை, மாலை, பகல், இரவு என எந்நேரமும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் எனர்ஜி டானிக் தான் தேநீர். இப்படி உடல், பொருள், ஆவி, கலாச்சாரம் என நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது தேநீர். வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு என எங்கு சென்றாலும் 'சூடா ஒரு டீ சொல்லுப்பா' என ஒரு குரல் ஒலிக்கும். அந்த குரலை எல்லோரும் அன்றாடம் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். இப்படி ஸ்ட்ராங்கா, லைட்டா, மீடியமா, சர்க்கரை கம்மியா என தேநீர் குறித்த குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

தேநீரின் வரலாறு: தென்கிழக்கு ஆசியாவில் தான் தேநீர் உதயமாகி உள்ளது. ஏனெனில் இங்கு தான் தேயிலைகள் விளைந்துள்ளன. சரியாக வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா மற்றும் திபெத் ஆகிய பகுதிகளுக்கு இடையில் தான் தேயிலை முதன்முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஷாங் அரசாட்சி காலத்தில் தான் மருத்துவ ரீதியாக தேநீர் பருகும் வழக்கம் தொடங்கியுள்ளது. கால ஓட்டத்தில் அப்படியே படிப்படியாக உலகம் முழுவதும் தேயிலைகள் பயணித்துள்ளன. 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸ் மூலமாக ஐரோப்பிய கண்டத்தில் நுழைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாட்டுக்குள் நுழைந்துள்ளது.

பால் கலந்து குடிப்பது, சர்க்கரை சேர்ப்பது, எதுவும் சேர்க்காமல் தேயிலையை மட்டும் கொதிக்க வைத்து குடிப்பது, குளுகுளுவென கூலாக குடிப்பது என பல வகையில் தேநீர் தயார் செய்து, பருகப்பட்டு வருகிறது.

தேநீரும்; ஐந்து ஆரோக்கிய நன்மைகளும்

>உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தேநீரை நிச்சயம் தங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும் என சொல்கிறார்கள் வல்லுநர்கள். இதில் உள்ள ஃபிளாவனாய்டு (Catechin) கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கிரீன் டீ பருகலாம் என வல்லுநர்கள் சொல்கின்றனர்.

>கிரீன் மற்றும் பிளேக் டீயில் காணப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தேநீர் போற்றப்படுகிறது. அதற்கு காரணம் அதில் உள்ள கலவைகள் என சொல்லப்படுகிறது. பதட்டம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஒரு கோப்பை தேநீரை பருகினால் பறந்து போகும் என சொல்லப்படுகிறது.

>தேநீரில் உள்ள Tannin-கள் வயிறு சார்ந்த பிரச்சனைகளை களைய அதிகம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tannin குடல் அழற்சியை குறைக்க உதவுவது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

>இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேநீர் பெருமளவு உதவுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பு உட்பட இருதய நோய் அபாயத்தை ஓரளவு குறைக்க இந்த பானம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT