நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்ட வருகிறது. அதிக வருவாய் உள்ள நாடுகள், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது. சில உயர் வருவாய் பிரிவு நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் வகையிலான தடுப்பூசிக்கு சம்பந்தபட்ட நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி அளித்து வருகின்றன.
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி அவசியமா என்பது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"இது முக்கியமானது. குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிப்பது மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கு கவலை உள்ளது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அதிக பாதிப்பு இல்லை. ஆஸ்துமா, சர்க்கரை உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஒரு மாதம் வரை அறிகுறி உள்ளது.
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. குழந்தைகளை தொற்றில் இருந்து பாதுகாப்பது, கரோனா தொற்று பரவலைத் தடுப்பது, பொருளாதாரம் மற்றும் கல்வியில் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை தடுப்பது உள்ளிட்ட 3 காரணங்களுக்காக குழந்தை தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிறது.