கோவை: ‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு அன்னையர் தினத்தன்று அன்பளிப்பாக மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வீடு பரிசளித்துள்ளார்.
கோவை சிறுவாணி சாலையில், பூலுவப்பட்டியிலிருந்து இடதுபுறம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடிவேலம்பாளையம் கிராமம். இங்கு ஏழை, எளிய மக்களுக்கு மூதாட்டி கமலாத்தாள்(85), ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருவதை அறிந்த மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும் எனகடந்த ஆண்டு உறுதி அளித்துஇருந்தார்.
2 சென்ட் நிலம்
பின்னர் அதற்காக தற்போது இட்லி கடை உள்ள இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் கமலாத்தாளின் பெயரில் 2 சென்ட் நிலத்தை வாங்கி, அவரது பெயரில் பதிவு செய்தனர். வீடு கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அன்னையர் தினமான நேற்று முன்தினம் மஹிந்திரா குழுமம் சார்பில் பாட்டியிடம் வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில், “வீடு கட்டுமான பணிகளை நிறைவு செய்து, இட்லி அம்மாவுக்கு அன்னையர் தினத்தில் அன்பளிப்பாக அளிக்க காரணமான குழுவினருக்கு நன்றி. எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவருக்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மஹிந்திரா வாட்டர் யுடிலிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.எம்.புகழேந்தி கூறும்போது, “பாட்டியின் தேவைக்கேற்ப வீட்டை வடிவமைத்து அளிக்கும்படி ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப சமையலறை, உணவு பரிமாறும் இடம், இரண்டு இடங்களில் திறந்தஜன்னல், உள்ளேயே கழிப்பறை, தங்கும் அறை ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மொத்தம் ரூ.12 லட்சம் செலவானது" என்றார்.
ஒரே விலைக்குதான் விற்பனை
கமலாத்தாள் கூறும்போது, “வீட்டை கட்டிக்கொடுத்த அய்யாவுக்கு (ஆனந்த் மஹிந்திரா) நன்றி. நான் எவ்வளவு காலம் இட்லி விற்பனை செய்கிறேனோ, அதுவரை ஒரே விலைக்குதான் விற்பனை செய்வேன்” என்றார்.