சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்த வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஏஜிஎஸ் மருத்துவ மைய இயக்குநர் ஆதித்யன் குகன் தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கோயம்புத்துார் பிரஸ் கிளப் உடன் இணைந்து முன்களப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனைஇலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தார். ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன் தொடக்க உரையாற்றினார். தோல் மற்றும் அழகு கலை மருத்துவர் ஜனனி ஆதித்யன் நன்றி தெரிவித்தார்.
பின்னர், ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குநர் ஆதித்யன் குகன் கூறும்போது, "நோய் வரும்முன் காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். 2021-ம் ஆண்டு முதல் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் ஏஜிஎஸ் மாஸ்டர்ஹெல்த் செக் அப் மையம் செயல்பட்டு வருகிறது. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து,குடும்பத்தினரின் பொருளாதாரத்தையும், உணர்வுகளையும் காக்க இலக்காக கொண்டு இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட், துரித உணவுகள், சர்க்கரை, உப்பு, மது, புகையிலை, அதிக கொழுப்புள்ள உணவுகள் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
வாரத்தில் 5 நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதை செய்தாலே சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயை நீண்ட நாட்களுக்கு தள்ளிப்போட முடியும்"என்றார்.கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் சென்டரில் முன்கள பணியாளர்களுக்கு நடைபெற்ற முழு உடல் பரிசோதனையை தொடங்கிவைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். உடன், மையத்தின் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன், தோல் மற்றும் அழகு கலை மருத்துவர் ஜனனி ஆதித்யன்.