அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.
வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும். குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும்.
ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும்.
குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது. அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.
உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.
‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.
> இது, மருத்துவர் கு.கணேசன் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்