வாழ்வியல்

ரூ.5,000 ஈட்டினால் ரூ.1,000 மட்டுமே வீட்டிற்கு... - வாடகை கார் ஓட்டுநர்களின் நிலை

செய்திப்பிரிவு

துரிதமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எல்லோருமே நகரத்தில் மேற்கொள்ளப்படும் குறுகிய பயணத்துக்கு ஏதாவது ஒரு வாடகை காரையோ ஆட்டோவையோ பயன்படுத்துகிறோம். அது நம்முடைய கைபேசிச் செயலிகள் மூலமாகச் சாத்தியப்பட்டுவிட்டது. ஆனால், நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் கார் ஓட்டுநர்கள் எத்தகைய வாழ்க்கைச் சூழலில் இருக்கிறார்கள், அவர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள், கண்ணுக்குத் தெரியாத இடத்தில் அமர்ந்துகொண்டு இணையதளத்தின் மூலமாகச் செயல்படும் பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கு நாமும் எப்படித் துணைபோகிறோம் என்பதையெல்லாம் நாம் ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

கார் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 12-லிருந்து 16 மணி நேரம் வரை கார் ஓட்டினால்தான், ஓட்டுநர்கள் அதிகபட்சமாக ரூ.5,000 சம்பாதிக்க முடியும். இதில் பெட்ரோல், டீசலுக்கு ரூ.1,500 செலவாகும். கார் முதலாளிக்கு ரூ.1,000 தர வேண்டும். ஓலா நிறுவனத்துக்கு ரூ.1,500 கொடுக்க வேண்டும். மீதமுள்ள ரூ.1,000-ஐதான் கார் ஓட்டுநர் வீட்டிற்கு எடுத்துச்செல்ல முடியும். எல்லா நாட்களும் ரூ.5,000 சம்பாதிக்க முடியாது. அப்போது அவர் பண நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்.

அது மட்டுமல்லாமல், ஓட்டுநர்கள் உடலளவிலும், உணர்வளவிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வீட்டுக்கு அருகில் பயணியை இறக்கிவிடும் தருணத்தில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று வீட்டுக்கு வந்தால், அந்தச் சமயத்தில்தான் அதிகமாகப் பணம் கிடைக்கும் சவாரியை அவருக்குக் கொடுப்பார்கள். உடனே, அந்த சவாரிக்காக ஓட வேண்டியிருக்கும். அடுத்தடுத்த சவாரிகள் என்று தொடர்ந்து வண்டி ஓட்டுவதால், உடலும் மனமும் களைப்படைந்த சூழலில்தான் வீட்டுக்கு வந்துசேர்கிறார்கள்.

வாடகை காரில் பயணிக்கும் எல்லாப் பயணிகளும் ஓட்டுநர்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஓட்டுநர்கள் என்றால் கிள்ளுக்கீரை என்றுதான் பலரும் நினைக்கிறோம். செயலியில் பதிவுசெய்தவுடனே கார் வந்துவிட வேண்டும். இல்லையென்றால் கோவப்படுகிறோம்.

வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டுமென்றால், ஒரு கிலோமீட்டருக்கு எவ்வளவு கட்டணம் என்று அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். ஓட்டுநருக்கு வந்துசேர வேண்டிய ஊதியத்தைச் சரியாகப் பெறுவதற்கு அரசு உதவ வேண்டும். அப்போதுதான் ஓட்டுநர்களின் வாழ்வு மேம்படும்.

> இது, காட்சித் தகவலியல் பேராசிரியர் அ.இருதயராஜ் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT