வாழ்வியல்

சோழவந்தான் அருகே பசுமைக்குடில் மூலம் வெள்ளரி சாகுபடி: வருவாய் ஈட்டும் பொறியியல் பட்டதாரி

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பசுமைக்குடில் மூலம் பொறியியல் பட்டதாரி ஒருவர் வெள்ளரி சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.

மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த ஸ்ரீதரன்-புவனேஸ்வரி தம்பதி மகன் ஆதித்யா (29). பி.இ. மெக்கானிக்கல் படித்த இவர், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இயற்கை விவசாயத்தி்ன் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இவர் சோழவந்தான் அருகே உள்ள நாச்சிகுளத்தில் 4 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக 50 சென்ட் பரப்பில் பசுமைக்குடிலில் வெள்ளரி விவசாயம் செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.

இது குறித்து ஆதித்யா கூறியதாவது: ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் இயற்கை விவசாயத்தில்தான் எனக்கு ஆர்வம். வாடிப்பட்டி வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் ஆலோசனைகள் பெற்று ரூ.20 லட்சம் செலவில் பசுமைக்குடில் அமைத்தேன். இதற்கு அரசு மானியமாக ரூ.8.90 லட்சம் வழங்குகிறது.

பசுமைக்குடிலில் வெள்ளரி பயிரிட்டுள்ளதால் மழை, வெயிலில் இருந்து பயிர் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பூச்சி தாக்குதல் 80 சதவீதம் கட்டுப்படுத்தப்படுகிறது. பிப்ரவரியில் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்து வருகிறேன். நாளொன்றுக்கு 800 கிலோ அறுவடை செய்கிறேன். அதனை நானே நேரடியாகச் சந்தையில் விற்பதால் லாபம் கிடைக்கிறது.

முழு ஈடுபாட்டுடன் விவசாயம் செய்தால் நல்ல வருமானம் தரும் தொழில். இதில் விவசாயத் தொழிலாளர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT