பயணங்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கக் கூடியவை. அதுவும் தனித்து செல்லக் கூடிய பயணம் புதிய அனுபவங்களைத் தரக்கூடியவை. அப்படியான ஸோலோ பயணங்களில் எத்தனை சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்பதை பறைசாற்ற தமிழ் சினிமா ஆண்டாண்டு காலமாக பல மெட்டுக்களை நமக்குக் கொடுத்துள்ளது.
...நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்; நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்... என்ற வரிகள் கொண்ட 'மே மாத' திரைப்பட பாடலும், ...'பயணம் நிகழ்கிற பாதை முழுதும் மேடையாய் மாறும்; எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம் ஓடும்...என்ற அண்மையில் மலர்ந்த 'மாறா' பட மெட்டாகட்டும் அத்தனையுமே கேட்கும் போது பயண வேட்கையை உண்டு பண்ணக் கூடியவைதான்.
அதுவும் ஒரு பெண்ணுக்கு தனிப் பயணம் எப்படி இருக்கும் என்பதை பெண்ணின் பார்வையில் பார்க்க வேண்டும். நிச்சயமாக விட்டு விடுதலையானது போலவே இருக்கும் என்றே நான் அறிந்த சில பயணர்கள் கூறினர்.
தனது முதல் ஸோலோ ட்ரிப் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார் லாஸ்யா சேகர். பெண் ஊடகவியலாளரான லாஸ்யாவுக்கு பயணங்கள் மீது எப்போதுமே தீராக் காதல் உண்டு. ஆனால் ஸோலோ ட்ரிப் என்பதை அவர் ஏட்டில் மட்டும் படித்தவராக இருந்திருக்கிறார். 2019 ம் ஆண்டு மே மாதம் நண்பர்களுடன் தேக்கடிக்கு பயணம் மேற்கொண்ட அவருக்கு திடீரென ஸோலோ ட்ரிப் வாஞ்சை வந்துள்ளது. அதற்குக் காரணமாக இருந்துள்ளார் அவரது நண்பர் கென்னத் ஹானன்யா. அவர் தந்த ஊக்கம் ஒருபுறம் இருக்க தன் உள்ளுணர்வைத் தவிர வேறு எதற்காகவும் காத்திருக்காதவராக நண்பர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வாகமோனுக்கு ஸோலோ ட்ரிப் புறப்பட்டிருக்கிறார். உள்ளூரில் பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தேயிலைத் தோட்டம் ஒன்றை தங்குவதற்குத் தேர்வு செய்துள்ளார். "முதல் ஸோலோ பயணமே திடீர் பயணம் என்பதால் பொதுவாக பெண்கள் பயணம் மேற்கொண்டால் ப்ரிஸ்க்ரைப் செய்யப்படும் பெப்பர் ஸ்ப்ரே, பென் நைஃப் எல்லாம் என்னிடம் இல்லை. ஒருவேளை அவை இருந்தாலும் அவசரத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்பது கூட தெரியாது என்பதால் நான் அதைப் பற்றி பெரிதும் யோசிக்கவில்லை" என்று பேச ஆரம்பித்தார் லாஸ்யா.
பொதுவாகவே நான் நண்பர்களுடன் பயணம் செய்தாலும் சரி தனியாகப் பயணம் செய்தாலும் சரி மிகவும் குறைந்த அளவிலான தவிர்க்க முடியாத பொருள்களை மட்டுமே எடுத்துச் செல்வேன். செல்லும் இடத்திற்கு ஏற்ற மாதிரி ஜெர்கின், ஸ்வெட்டர் அல்லது பருத்தி ஆடை என தேர்வு செய்துகொள்வேன். ஜீன்ஸ், ஷூ கண்டிப்பாக இருக்கும். ஸோலோ பயணங்கள் இதுவரை 2 நாட்கள் தாண்டியதில்லை என்பதால் அணிந்திருக்கும் ஜீன்ஸுடன் மாற்றுவதற்கு ஒரு செட் டாப் மட்டுமே இருக்கும். சில அடிப்படையான மாத்திரைகள் இருக்கும். அவ்வளவே.
முதல் ஸோலோ ட்ரிப்புக்காக தேயிலைத் தோட்ட டென்ட் ஒன்றை புக் செய்திருந்தேன்.
இரவுப் பொழுது பச்சை வாடையுடன் இனிமையாக இருந்தது. தூரத்தில் அருவி மட்டுமே இரைந்து கொண்டிருந்தது. அதனால், பார்ப்பதற்கு டவுன்லோட் செய்து வைத்திருந்த பேய்ப் படத்தை பார்க்கவில்லை. படம் தான் பயமூட்டும் எனத் தோன்றியதே தவிர அந்த சூழல் பயம் தரவில்லை. லாந்தர் விளக்குடன் கையில் இருந்த மேகி கப் நூடுல்ஸுடன் இரவு என்னை லகுவாக்கியிருந்தது. ஆனால் புதிய பயணம், முதல் பயணம் என்பதால் விடிந்தவுடன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பார்த்துப் பழக வேண்டும் என்ற வேட்கை இருந்தது. காலையில் எழுந்தவுடன் டென்ட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது பச்சைப் பசேலன தேயிலைத் தோட்டம், தூரத்தில் அருவி, விரல் அருகே மஞ்சு, ஓங்கி உயர்ந்த சில்வர் ஓக்ஸ் மரங்கள், தரையெல்லாம் அவற்றின் வெள்ளைப் பூக்கள் என்றிருந்தன.
வெளியே வந்து சில நிமிடங்கள் கூட இருக்காது சில்வர் ஓக்ஸ் பூக்கள் என்னை வாழ்த்தியிருந்தது. தோட்டத்தில் இருந்த தொழிலாளி ஒருவரைக் கூப்பிட்டு அவசரமாகப் படம் பிடிக்கச் சொல்லி நினைவுகளுக்காகப் பத்திரப்படுத்திக் கொண்டேன். ஸோலோ ட்ரிப்களில் நிறைய செல்ஃபி எடுக்கலாம் ஆனால் நாம் நினைக்கும் ஆங்கிளில் நம்மை படம் பிடித்துக் கொள்ள முடியாது. அதுமட்டும் தான் ட்ராபேக். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. எத்தனையோ முறை பயணங்கள் சென்றிருக்கிறேன்.
பல இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அன்று நிகழ்ந்தது போல் ஒரு மாயத்தை நான் என்றும் உணர்ந்ததில்லை. புதிய குழந்தையாக என்னை நான் உணர்ந்தேன். (அப்படி லாஸ்யா சொன்ன போது நமக்கு, 'திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்..' என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்து சென்றன) அடுத்த 2 நாட்கள் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் பகல், மவுனத்துடன் இரவு என்று கழிந்தன. எனது முதல் ஸோலோ ட்ரிப்பை நான் எப்பவுமே ஆகச் சிறந்த அனுபவம் என்றே ரேட் செய்வேன் என்றார் லாஸ்யா. அதன் பின்னர் கரோனா லாக் டவுன்களை அனுப்ப ஸோலோ ட்ரிப்பின் வேட்கை நீங்காத ரீங்காரமாக மனதில் எழ, கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் இருந்து ரிஷிகேஷ் நோக்கிச் சென்றுள்ளார் லாஸ்யா.
அந்தப் பயணத்தில் முதல் பயணத்தைத் தாண்டியும் சில ஆயத்தங்களை சிறப்பாகவே செய்து கொள்ள முடிந்ததாம். இரண்டாவது பயணத்தில் எனக்கொரு புதிய துணை கிடைத்தது என்ற சொன்ன லாஸ்யா, யார் என்று கேட்டால் அது நான் தான் என்றார். ஆம், புதிய இடத்திற்கு செல்கிறோம், புதிய மொழி, புதிய கலாச்சாரம் என்பதால் வழியில் பேச வாய்ப்புள்ளவர்களிடம் எல்லாம் பேசிவிட வேண்டும், பழகிவிட வேண்டும் என்ற வேட்கை முதல் பயணத்தில் இருந்ததாகவும் இரண்டாவது பயணத்தில் தானே தனக்கு சிறந்த துணை என்பதை உணர்ந்ததாகவும். ரிஷிகேஷில் கங்கையின் ஆர்ப்பரிப்பைப் பார்த்தபோது அந்தத் துணையை (The companion in me) உணர்ந்ததாகவும் கூறினார்.
பொதுவாக ஸோலோ ட்ரிப் தந்த அனுபம் பற்றி லாஸ்யா இப்படி விவரிக்கிறார்.. "எனது ஸோலோ பயணங்கள் நிச்சயமாக துணிச்சலானவையே. இயற்கையின் மடியில் நான் ஒரு மானுடப் பிறவியாக விட்டு விடுதலையான உணர்வைப் பெற்றேன். அந்த உணர்வு பாலினம் தாண்டியது. தனியாக பயணங்களா அதில் என்ன கிடைக்கும்.. பைத்தியக்காரத்தனம் என்று சிலர் பார்த்தாலும் கூட எனக்கு எனது ஸோலோ பயணங்கள் எல்லாமே ஆன்மாவை நோக்கிய பயணங்கள் தான். எனது திறன்களை எனக்கு அடையாளம் காட்டுகிறது. ஆகையால் பயணத்துக்கு பாலினத்தை முன்வைக்காமல் எல்லோருமே வாழ்க்கையில் ஒருமுறையேனும் ஸோலோ ட்ரிப் ஒன்று சென்று வர வேண்டும்" எனக் கூறினார் லாஸ்யா.
அடுத்த முறை ஸோலோ ட்ரிப் முயற்சிக்கும்போது இந்த 5 டிப்ஸ்களை மறக்க வேண்டாம்!
1. நீங்கள் எந்த இடத்திற்கு செல்கிறீர்களோ, அந்த இடத்தின் வரலாறு, புவியியலைத் தெரிந்து கொள்ளுங்கள். அங்குள்ள தட்ப வெப்பம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். எந்த சீசனில் அங்கு செல்வது சரியானது என்பதைப் புரிந்து கொண்டு திட்டமிடுங்கள். அதற்கேற்ப துணிமணிகளையும், அடிப்படை மருந்துகளையும் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்.
2. தங்கும் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்... நீங்கள் தங்கப் போகும் இடத்தை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை அந்தப் பகுதியில் அதுதான் பயண சீசன் என்றால் நீங்கள் தங்க இடம் கிடைக்காமல் போகலாம். உங்கள் பயணத் திட்டம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இரண்டு குறிப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை நீங்களும் இன்னொன்றை நட்பு அல்லது குடும்பத்தினரிடமும் கொடுத்துச் செல்லுங்கள். பயணம் முடியும் வரை நெருங்கியவர்களில் யாரேனும் ஒருவருக்காவது தகவல்களை அவ்வப்போது மெசேஜ் மூலம் மட்டுமாவது தெரிவித்துக் கொண்டே இருங்கள்.
3. பயணங்களின் போது உங்களுடைய அடையாள ஆவணங்கள் எல்லா இடங்களிலும் தேவைப்படும். அதனால் அவற்றை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் டிஜிட்டல் ஆவணம் போதுமோ அங்கெல்லாம் அதையே பயன்படுத்துங்கள். உங்கள் பையில் அவற்றை எப்போதும் ஒரே இடத்தில் வைத்திருங்கள்.
4. பயணத்துக்கு திட்டமிடல் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நேரம் தவறாமையும் முக்கியம். ரயில், விமானம் அல்லது பேருந்து எதுவாக இருந்தாலும் உங்களுக்காக காத்திருக்காது. குரூப் டூராக இருந்தாலும் கூட உங்களுக்காக மற்றவர்களை காத்திருக்க வைத்து விடாதீர்கள்.
5. கொஞ்சமா பேக் பண்ணுங்க.. பயணம் என்பது உங்களின் வசதியான சூழலில் இருந்து வெளியே செல்லும் வாய்ப்பு. அதுவும் ஸோலோ ட்ரிப் என்பது முற்றிலும் விடுபட்ட பயணம். அத்தகைய பயணங்களில் குறைந்த தேவைகளுடன் நிறைவாக இருக்க பழகிப் பாருங்கள். அதுதான் உங்களை இயற்கைக்கு அருகே அழைத்துச் செல்லும். பெரிய பொதியுடன் ட்ரெக்கிங் செல்வதற்கு பதில் வீட்டிலேயே இருக்கலாம்.
இந்த சின்னச்சின்ன டிப்ஸ் நம் பயணத்தை எளிதாக்கும், இனிமையானதாக்கும்.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in