பெங்களூரு: ரூ.50-க்கு அன்லிமிடெட் ஆரோக்கிய மீல்ஸ் வழங்கும் உணவகம் நடத்தும் கர்நாடகாவைச் சேர்ந்த வயதான தம்பதியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி கவனம் ஈர்த்துள்ளது.
கர்நாடக மாநிலம், மணிபாலில் சிறிய உணவகம் நடத்தி வரும் இந்த வயதான தம்பதியினர். குறைந்த விலையில் ஆரோக்கியம் மிகுந்த உணவைத் தருகின்றனர். '50 ரூபாய்க்கு அன்லிமிடெட் உணவு' என்பதே இந்த உணவகத்தின் சிறப்பு. உணவை வாழை இலையில் கொடுக்கிறார்கள். இந்த அன்லிமிட்டெட் மீல்ஸ்ஸில் சாதம், ரசம், பருப்பு, பொரியல், ஊறுகாய், சாலட் மற்றும் தயிர் ஆகியவை இடம்பெறுகின்றன. குறிப்பாக, இந்த மீல்ஸ் ஆரோக்கியமான உணவாகவே தயாராகிறது.
இந்த உணவகத்தை 1951-ல் இருந்து இந்தத் தம்பதி நடத்தி வருகிறார்கள். 'ஹோட்டல் கணேஷ் பிரசாத்' என்ற பெயருடன் இருந்த உணவகம், தற்போது வாடிக்கையாளர்களால் ‘பாட்டி - தாத்தா உணவகம்” என அன்பாக அழைக்கப்படுகிறது. இவர்கள் உணவின் மூலம் அன்பைக் கொடுத்து மக்களின் அன்பை பெற்று வருகிறார்கள்.
இந்த வயதிலும் முகத்தில் சிரிப்புடன் வாடிக்கையாளர்களை கவனிப்பது, வயதாகிவிட்டதே என சோர்ந்து போகாமல் தனது வேலையை சிறப்பாக செய்து வரும் இவர்கள் பல இளைஞர்களுக்கு உத்வேகமாக திகழ்ந்து வருகிறார்கள்.