வாழ்வியல்

"திருமண வாழ்க்கையை தள்ளிப்போடாதீர்கள்" - இளம் தலைமுறையினருக்கு ஆளுநர் தமிழிசை அறிவுரை

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: "ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரியான நேரத்தில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்கள் சாதனை செய்ய 30, 35 வயதை கடக்கிறார்கள். அது மருத்துவரீதியில் பல பிரச்சினைகளை உண்டாக்குகிறது" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியது: "மாணவர்கள் வாய்ப்புகளை வரும்போது பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இது போட்டி நிறைந்த வாழ்க்கை. நேர்முகத் தேர்வுக்கு செல்லும் உங்களுக்கு ஒரு மொழி தெரிந்த சூழலில் மற்றொருவருக்கு 3 மொழி தெரிந்திருந்தால் வாய்ப்பு அவருக்கு சென்றுவிடும். இந்தப் போட்டி நிறைந்த உலகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு நிமிடம் சென்றால், அதை மீண்டும் பெற முடியாது. இன்று இருப்பதைவிட, நாளை நாம் உயர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய மொழி, புதிய கலையை கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் வாய்ப்புகளை பெருக்க முடியும். மாணவர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ள, மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் தாய், தந்தையருக்கு பாராட்டும், நன்றியும் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த பட்டமளிப்பு விழா உடையை அணிய காரணமே பெற்றோரின் தியாகம்தான். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எம்எல்ஏவாக விரும்பினேன். எனது தாய் என்னை டாக்டராக வேண்டும் என்றார். நான் அம்மாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, அரசியல்வாதியானேன். எனவே பெற்றோர்களுக்கான கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும். பெற்றோரை பயன்படுத்தி தூக்கி எறியும் போக்கு அதிகரித்துள்ளது. அது தவறானது பெற்றோருக்கு நன்றியுணர்ச்சியை காட்டுங்கள்.

அதேபோல் வாய்ப்பு வரும்வரை திருமண வாழ்க்கையை தள்ளிப்போடுகிறார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரியான நேரத்தில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்கள் சாதனை செய்ய 30, 35 வயதைக் கடக்கிறார்கள். அது மருத்துவரீதியில் பல பிரச்சினைகளை உண்டாக்குகிறது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான். ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருப்பவர்களே வாழ்க்கையை அனுபவிப்பர்கள்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT