வாழ்வியல்

எளிமை திருமணங்களை சாத்தியமாக்கிய கரோனா நாட்கள்!

செய்திப்பிரிவு

கோவை: கரோனா பாதிப்பு, நம்மிடையே இருந்த பல்வேறு நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அவ்வாறு நிகழ்ந்த மாற்றங்களில் முக்கியமானதாக திருமண நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் திருமண நிகழ்வுகள் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தவை. சமூக, பொருளாதார ரீதியாக மிக முக்கியமானதொரு நிகழ்வு. இந்தியர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் செலவுமிக்க நிகழ்வும் அதுதான். திருமணத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள். எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது அந்தஸ்தாக கருதப்படுகிறது. திருமண அழைப்பிதழ்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் எல்லாம் உண்டு.

ஆண்டுக்கு இந்தியாவில் 10 மில்லியன் திருமணங்கள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், சமீப காலங்களாக திருமணம் சார்ந்த செலவினங்கள் பல மடங்கு உயர்ந்து வந்தன.

முன்பெல்லாம் உணவு, மண்டப செலவு, ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கான செலவுகள் மட்டுமே. ஆனால் தற்போது திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்வுகள், அழகு நிபுணர்கள், டெகரேஷன், கச்சேரி என செலவுகள் அதிகரித்துள்ளன. திருமணங்களுக்கான ‘மேட்ரிமோனியல்’ இணையதளங்கள் தொடங்கி மேற்கூறப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய திருமண சந்தை என்பது மிகப்பெரியது.

இதில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி திருமண நிகழ்வைக் கொண்டாட கடன் வாங்கியாவது செலவு செய்திட தயாராக இருக்கிறார்கள் பொதுமக்கள். இதனால் திருமணம் என்பது எந்தளவுக்கு கொண்டாட்ட நிகழ்வோ, அதே அளவுக்கு அது அந்த குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படுத்தும் நிகழ்வாகவும் மாறிவிட்டது. இப்படி நாளுக்கு நாள் திருமணம் என்பது செலவு மிக்கதாக மாறிக்கொண்டிருந்த நிலையில் தான் கரோனா ஊரடங்கு காலம் அதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நாட்கள், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில் திருமணத்தை நடத்த திட்டமிட்டவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மண்டபங்களை பதிவு செய்தது முதல் சாப்பாடு, புத்தாடைகள், வாகன ஏற்பாடுகள் என அனைத்து விதமான ஏற்பாடுகளும் தடைபட்டன. சிலர் திருமணத்தை பிறகு நடத்திக் கொள்ளலாம் என ரத்து செய்தனர். கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பலர் குறித்த தேதியில் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்தனர். பல நூறு பேர் கூடும் திருமணங்கள் பத்து பேருக்கும் குறைவானவர்கள் முன்னிலையில் நடைபெற்றன.

இந்த திருமணங்களுக்கு மண்டப செலவு, உணவு செலவு, புகைப்பட செலவு என எதுவும் கிடையாது. கோடிகளில் திட்டமிட்டிருந்த திருமணச் செலவுகள் லட்சங்களிலும், லட்சங்களில் திட்டமிடப்பட்ட திருமணங்கள் சில ஆயிரங்களிலும் சுருங்கின.

இதிலிருந்து ஒருபடி மேலே போய் தற்போது காணொலி வாயிலாக கூட திருமணங்கள் நடைபெறுகின்றன. வரும் நாட்களில் திருமணத்துக்கு நேரில் வரவேண்டிய உறவினர்கள் வீடியோ அழைப்புகளின் வழியே திருமணத்தில் கலந்து கொள்வது இயல்பான ஒன்றாக மாறிவிட வாய்ப்புள்ளது. வாழ்த்து சொல்வது, அட்சதை தூவுவது வீடியோ அழைப்புகளின் வழியே முடிந்து விடக்கூடும். திருமணத்துக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது, மொய் வைப்பது போன்றவ ஆன்லைன் செயலிகள் மூலமாக நடைபெற வாய்ப்புள்ளது.

கரோனா பாதிப்பு காலத்தில் திருமண நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றத்தை மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். விரும்பவும் தொடங்கிவிட்டனர். மிகக் குறைவான செலவுகளோடு திட்டமிட்டால் கூட லட்சக்கணக்கில் சாதாரணமாக செலவாகிவிடும் நிலையில், திருமணங்களுக்கு வாங்கிய கடனை அடைக்கவே பல ஆண்டுகள் வேலை செய்யும் அளவுக்கு சிலர் தள்ளப்படும் நிலையில்தான் பெரும் பொருளாதார செலவுகள் எதுவுமில்லாமல், கடன் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் எளிமையாக திருமணங்களை நடத்தலாம் என்பதை சாத்தியமாக்கியுள்ளன இந்த கரோனா நாட்கள்.

இது ஒருபுறமிருக்க எளிமை திருமணங்கள், திருமண சந்தையை சார்ந்துள்ள தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

SCROLL FOR NEXT