வாழ்வியல்

‘வேண்டுமென்றே செய்கிறார்கள்’ என்று பேசாமல் விட்டுவிடாதீர்கள்! - தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் வழிகள்

டாக்டர் ஆ.காட்சன்

தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அனைவருடைய எண்ணமும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதில்லை என்பது பற்றித் தெரியுமா உங்களுக்கு?

தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வளர்இளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். புள்ளிவிவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.

மனதில் என்னதான் நடக்கும்?

‘சாகவேண்டும் என்பதற்காகத்தானே ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்’ என்பதுதான் பெரும்பாலோருடைய கேள்வி. சில வேளைகளில் உறவினர்கள் ‘நீ பிழைத்ததற்கு, செத்தே தொலைத்திருக்கலாம்’ என்று விரக்தியில் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில், தற்கொலைக்கு முயற்சிக்கும் எல்லோருடைய நோக்கமும் சாகவேண்டும் அல்லது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு தற்கொலை முயற்சியும் ‘உதவிகோரும் ஒரு கதறலாகவே’ (Cry for help) மனநல ரீதியாக பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான விடலைப்பருவத்தினர் தற்கொலை முயற்சி மூலம், தங்கள் மனதில் நடக்கும் போராட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு முன்பு ‘வாழ்வதா? சாவதா?’ என்ற போராட்டம் மனதுக்குள் நடந்திருக்கும். எனவே, சரியான நேரத்தில் கிடைக்கும் மனநல ஆலோசனைகள் பெரிய ஆபத்திலிருந்து அவர்களை காப்பாற்றும். ‘வேண்டுமென்றே செய்கிறார்கள்’ என்று பேசாமல் விட்டுவிடுவது, அவர்களைக் காப்பாற்றும் நல்ல வாய்ப்பை தவறவிடுவதைப் போன்றது.

குடும்ப காரணங்கள்

வளர்இளம் பருவத்தினரின் பெரும்பாலான தற்கொலை முயற்சிகளுக்கு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளே முக்கிய காரணம். பெற்றோர் திட்டுவதால் உணர்ச்சிவசப்பட்டுவிடுவது, தாங்கள் கேட்பதை பெற்றோர் வாங்கித் தராத காரணங்கள், கருத்து வேறுபாடு என பல காரணங்கள் இருக்கலாம். அதிலும் வளர்இளம் பருவத்தில் வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் அறிவுரைகள், எட்டிக்காயாகக் கசப்பதால் எளிதில் வாக்குவாதம் வெடித்துவிடும். பின்னர் அது முற்றி, தற்கொலை முயற்சியாக மாறிவிடும். வீட்டில் அக்கா டிவி ரிமோட்டை கொடுக்கவில்லை என்பதுபோன்ற சின்னச் சின்ன காரணங்களுக்காகக்கூட விபரீத முடிவு எடுத்த விடலைகளும் உண்டு.

தனிப்பட்ட காரணங்கள்

நண்பர்களுடன் ஏற்படும் மனத்தாங்கல், ஒரு தலைக்காதல், காதல் தோல்வி, படிப்பில் நாட்டமின்மை, தேர்வில் தோல்வி, வாழ்க்கையை வெறுமையாக உணர்வது போன்ற தனிப்பட்ட காரணங்களும் தற்கொலையில் முடியலாம். எளிதில் உணர்ச்சிவசப்படுதல், அவசரப்பட்டு முடிவெடுக்கும் தன்மை, ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமை போன்ற குணரீதியான காரணங்களும் உண்டு.

பொதுவாக எல்லோரும் யோசித்துவிட்டுதான் செயல்படுவார்கள். ஆனால், சிலர் மட்டும் குணாம்ச ரீதியிலேயே செயல்பாட்டுக்குப் பின்னர்தான் யோசிப்பார்கள். அப்படிப்பட்ட இளம்பருவத்தினர், சின்ன காரணங்களுக்குக்கூட அவசரப்பட்டு தற்கொலை முடிவுவரை போவதுண்டு. ஒரே வித்தியாசம் என்னவென்றால் விஷத்தை குடித்தவுடன், யாரிடமாவது விஷயத்தை சொல்லி உடனடியாகக் காப்பாற்றுமாறு உதவி கேட்பார்கள்.

மனநோய்கள்

விடலைப்பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில், மனநோய்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மனநோய் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பால் நிகழலாம். மன அழுத்த (Depression) நோயின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். வளர்இளம் பருவத்தினரின் மரணங்களுக்கு முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று.

மனச்சிதைவு நோயின் பாதிப்பாலும் இது ஏற்படும். இதில் தற்கொலை செய்துகொள்ளுமாறு கட்டளையிடும் மாயக்குரல்கள் சில நேரம் கேட்பதால், அதற்கு அடிபணிந்து சிலர் நிறைவேற்றியும் விடுகிறார்கள். இன்றைக்கு வளர்இளம் பருவத்தினரை மிரட்டும் ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால், போதைப் பழக்கத்தால் பெருகிவரும் தற்கொலைகள். போதைப்பொருட்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல தற்கொலைச் சம்பவங்களுக்கு காரணமாகின்றன.

மனநோய்கள் மூளைநரம்புகளை பாதிக்கும் ஒரு நோயாக ஏற்றுக்கொள்ளப்படாமல், பேய் பிடித்துவிட்டதாகவும் சாபக்கேடாகவும் பார்க்கப்படுவதால் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்தே முறையான சிகிச்சைக்கு வரும் அவலநிலைதான் உள்ளது.

- `நலம் வாழ` பகுதியிலிருந்து.

SCROLL FOR NEXT