பழநி அருகேயுள்ள புகையிலை பயன்பாடு இல்லாத குதிரையாறு அணை கிராமம்.

 
வாழ்வியல்

பழநியில் புகையிலை பயன்பாடு இல்லாத 56 கிராமங்கள் - வெளியூர் நபர்களும் புகைப்பிடிக்க தடை

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி சுகாதார மாவட்டத்தில் 56 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத கிராமங் களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் வெளியூர் நபர்களும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி அவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களும் புற்றுநோய் மற்றும் பல்வேறு உடல் உபாதை களால் பாதிக்கப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பயன்பாடுகளை கட்டுப்படுத்த மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் பழநி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள குதிரையாறு அணை கிராமம் உட்பட மொத்தம் 56 கிராமங்கள் புகையிலை பயன் பாடு இல்லாத கிராமங்களாக மாறியுள்ளன.

கிராமத்தில் உள்ள கடையில் ‘புகையிலை பயன்பாடு இல்லாத கிராமம்’ என ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு.

இந்த கிராமங்களில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், கிராம மக்கள் யாரும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகையிலை பயன்பாடு இல்லாத கிராமம் என கடைகள், வீடுகளில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

புகையிலை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் படிப்படியாக மற்ற கிராமங் களிலும் அமல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து குதிரையாறு அணை கிராமத்தினர் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் தற்போது யாரும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதில்லை. கடைகளிலும் விற்பனை செய்வதில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து எங்கள் கிராமத்துக்கு வருபவர்களையும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை என்று கூறினர்.

SCROLL FOR NEXT