வாழ்வியல்

‘திறமையற்ற’ வீரனின் சாதனைக் கதை!

ஜெய்குமார்

சா

ய்னா நேவால், பி.வி.சிந்து போன்ற வீராங்கனைகள் சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் வென்று இந்தியாவுக்கு வெற்றிகளைத் தேடித் தந்தனர். இது இந்திய வீரர்களின் காலம். கிடாம்பி ஸ்ரீநாத், பாருபள்ளி காசியப் போன்ற வீரர்களின் வெற்றிகளை அடுத்து பிரனாய்குமாரும் யு.எஸ். ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று வெற்றிப் பட்டியலில் முத்திரை பதித்திருக்கிறார்.

1954-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் யு.எஸ். ஓபனில் இந்திய வீரர் ஒருவர் பட்டம் வெல்வது இதுதான் முதல் முறை. மூன்று முறை யுஎஸ் ஓபன் பட்டம் வென்ற வியாட்நாமின் முன்னணி பாட்மிண்டன் வீரரான டின் மின் குயூனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரனாய் குமார், சக வீரரான பாருபள்ளி காசியப்பை வீழ்த்திப் பட்டம் வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இந்த இளம் வீரரின் பாட்மிண்டன் கதை சுவாரஸ்யமானது.

எச்.எஸ்.பிரனாய் குமார், 2010-ம் ஆண்டிலிருந்துதான் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிவருகிறார். இவருடைய தந்தையும் பாட்மிண்டன் வீரர்தான். அனைத்திந்திய விமானப் படை பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர். தேசிய அளவிலான எந்தப் போட்டியிலும் கலந்துகொண்ட அனுபவமும் இல்லாமலேயே இந்தப் பட்டத்தை வென்றவர்.

தந்தையின் பாட்மிண்டன் ஆர்வம் பிரனாய்க்கும் வந்தது. சிறுவயதிலிருந்தே பாட்மிண்டன் விளையாடினாலும், 10-ம் வகுப்பு படிக்கும் போதுதான் தன்னால் பாட்மிண்டன் வீரராக முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது.

பாட்மிண்டன் வீரராகத் தீர்மானித்த பிறகு முறையான பயிற்சிக்காகப் பயிற்சியாளர் ஒருவரிடம் பிரனாயை அவருடைய தந்தை சேர்த்துள்ளார். பிரனாயின் ஆட்டம் வேகம் குறைந்ததாக இருப்பதாகவும் அவரால் தனி நபர் (single) ஆட்டக்காரராகப் பிரகாசிக்க முடியாது என்றும் அந்தப் பயிற்சியாளர் சொல்லியிருக்கிறார். அதனால் அவரை இரட்டையர் (Doubles) ஆட்டத்துக்கு மட்டும் தயாராகச் சொல்லுங்கள் என்றிருக்கிறார்.

அவரது இந்த விமர்சனத்தையே ஊக்கமாகக் கொண்டு விளையாடினார் பிரனாய். யூத் ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து 2011-ல் பஹ்ரைனில் நடந்த சர்வதேசப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம், 2013-ல் மும்பையில் நடந்த சர்வதேச டாடா சாம்பியன் போட்டியில் இரண்டாம் இடம் என அடுத்தடுத்து வெற்றி பெற்று முத்திரைப் பதித்தார். தனி நபர் ஆட்டத்தில் விளையாடத் தகுதியற்றவர் எனச் சொல்லப்பட்டவர் தொடர்ந்து மூன்றுமுறை சர்வதேசத் தனிநபர் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்து தவறான அபிப்ராயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

2014-ம் ஆண்டு வியட்நாம் ஓபன் போட்டியிலும் இறுதிவரை சென்று இந்தோனேசியாவின் டயனோசியஸ் ஹெய்மன் ருபக்காவிடம் தோல்வியடைந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இரண்டாம் இடமே கிடைத்தது. அப்போதுதான் தனது ஆட்ட முறைகளை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். ஸ்மாஷ்களை முழுவதும் தவிர்க்க ஆரம்பித்தார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

அதே ஆண்டில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சர்வதேசப் போட்டியில் இந்தோனேசியாவின் ஃபைர்மேன் அப்துல் கோலிக்கை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் பிரிவில் பிரனாயின் முதல் சர்வதேச வெற்றி இதுதான். அதன் பிறகு கடந்த ஆண்டு சுவிஸ் ஓபன் போட்டியில் சர்வதேசத் தரவரிசையில் 15-ம் இடத்திலிருந்த ஜெர்மனியின் மார்க் ஸ்விம்பளரை வீழ்த்திப் பட்டம் வென்றார்.

தொடர்ந்து மூன்று முறை சர்வதேசப் போட்டிகளில் இரண்டாம் இடம்பிடித்த பிரனாய், 2014-லிருந்து தொடர்ந்து மூன்று முறை சர்வதேசப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்த வெற்றிகளின் மூலம் சர்வதேசப் போட்டித் தரவரிசையில் 464 இடத்தில் தொடங்கிய பிரனாய் இன்று17-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் பாட்மிண்டனில் பிரனாய் உச்சத்துக்கு செல்வார் என்பதற்கு இந்தத் தொடர் வெற்றிகளை முன்னறிவிப்பாகச் சொல்லலாம்.

SCROLL FOR NEXT