வாழ்வியல்

குஜராத்தை மிரட்டும் ‘சண்டிபுரா வைரஸ்’ - அறிகுறிகள் முதல் பாதிப்புகள் வரை | ஒரு தெளிவுப் பார்வை

60 ஆண்டுகளுக்குப் பின் வீரியமாகும் பரவல்

போத்தி ராஜ்.க

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் பருவமழையில் பரவும் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று பாதிப்பால் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியாவில் 2003-ஆம் ஆண்டில் இருந்தே பரவி வந்தாலும், குழந்தைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பெரும்பாலும் மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரவி வருகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘சண்டிபுரா வைரஸ்’ என்றால் என்ன?

1965-ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சண்டிபுரா கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதித்தபோது இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்தக் கிராமத்தில் அறியப்பட்டதால், இதற்கு ‘சண்டிபுரா வைரஸ்’ எனப் பெயரிடப்பட்டது.

2004-ஆம் ஆண்டு ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் இந்த வைரஸ் குறித்து கட்டுரை வெளியானது. அதில், ‘இது ‘ராப்டோவிரிடே’ (Rhabdoviridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த, ‘வெசிகுலோவைரஸ்’ (Vesiculovirus) பேரினத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரஸ்’.

நாய்களுக்குப் பரவும் ரேபிஸ் வைரஸும் இதே குடும்பத்தைச் சேர்ந்ததுதான் என்பதால், ரேபிஸ் பாதிப்பின் அறிகுறிகள் பெரும்பாலும் இதிலும் தென்படும். பாதிக்கப்பட்டவருக்குக் ‘கடுமையான மூளை அழற்சி’ ஏற்பட்டு, நரம்பு மண்டலம் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை உருவாக்கும். முக்கியமாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் எப்படிப் பரவுகிறது?

சண்டிபுரா வைரஸ் என்பது பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவக் கூடியது. கொசுக்கள், கடித்து உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் மீது அமரும் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. மழைக்காலம் தொடங்கும்போது, பெண் இனத்தைச் சேர்ந்த ‘ஃபிளெபோடோமின்’ வகை மணல் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலம் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது.

பெரும்பாலும் பருவமழைக் காலம், ஈரப்பதமான சூழலிலும் இவ்வகை ஈக்களின் இனப்பெருக்கம் வேகமாக இருக்கும். இவ்வகை ஈக்களும் கொசுக்களும் பெரும்பாலும் கால்நடைகள் வளர்க்கும் இடங்கள், ஈரமான மண், சாணம், குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் இடங்கள் மற்றும் மண் சுவர்களின் இடுக்குகள்,விரிசல்களில் வசிக்கும்.

நோய்த் தொற்றின் அறிகுறிகள் என்ன?

சண்டிபுரா வைரஸ் என்பது ‘என்சிபாலிடிஸ்’ எனப்படும் மூளைத் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்தது. அறிகுறி தென்பட்டால், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அதன் தீவிரத்தன்மை அதிகரிக்கும் என ‘லான்செட்’ மருத்துவ இதழ் தெரிவிக்கிறது.

> காய்ச்சல் தடுப்பு மருந்து கொடுத்தாலும் சில மணி நேர இடைவெளியில் மீண்டும் காய்ச்சல் அதிகரிக்கும்.

> காய்ச்சலைத் தொடர்ந்து கடுமையான வாந்தி இருக்கும்.

> பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலும் நினைவாற்றலிலும் மாற்றம் ஏற்படும். அவர்களின் செயல்பாடுகள் மாறத் தொடங்கும். இது மூளை பாதிப்பின் எதிரொலியாகும்.

> திடீரென வலிப்பு ஏற்படுதல் மற்றும் வயிற்றுப்போக்கு அதிகரித்தல்.

> நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுச் செயலிழக்கத் தொடங்கும். பாதிக்கப்பட்டவரால் பேசுவது கடினமாகும், பார்வைத்திறன் குறையும், உடலின் நிலைத்தன்மையை இழப்பர்.

> மூளையில் எரிச்சல், முதுகுத்தண்டில் வலி, தலைவலி, கழுத்து விரைப்புத்தன்மை மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் போதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

அதிகம் பாதிக்கப்படுவோர் யார்?

சண்டிபுரா வைரஸ் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே, குறிப்பாகக் கிராமப்புறங்களில் அதிகமாகப் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டில் ஆந்திராவில் வைரஸ் பரவியபோது, 9 மாதக் குழந்தை முதல் 14 வயதுக் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள்தான் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டன. தற்போது குஜராத்திலும் பெரும்பாலான குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி அல்லது மருத்துவ சிகிச்சை இருக்கிறதா?

சண்டிபுரா வைரஸுக்கு இதுவரை எதிர்ப்பு மருந்தும், தடுப்பூசியும் இல்லை. நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை அளிப்பதே சிறந்த வழியாகும்.

> குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் 50% முதல் 70% வரை உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தொடக்கத்திலேயே கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிப்பதே உயிரைக் காக்கும் ஒரே வழியாகும்.

> தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல்.

> அறிகுறிகளுக்கு ஏற்றவாறு மருந்துகள் அளித்தல்.

> உடலின் வெப்பத்தைக் குறைக்கும் வகையில் ஈரத்துணியால் ஒத்தடம் கொடுத்தல், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுதல் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தல்.

> மூளைத் திசுக்கள் வீங்காமல் இருக்க உரிய சிகிச்சைகளை அளித்தல்.

பாதிப்பை எப்படிக் கண்டறிவது?

ஒரு குழந்தைக்கு வைரஸின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர் பரிந்துரை மூலம் ரத்தப் பரிசோதனை, ‘பி.சி.ஆர் பரிசோதனை’ அல்லது ‘ஐ.ஜி.எம் எலிசா பரிசோதனை’ செய்து உறுதி செய்யலாம்.

வைரஸ் பரவலை எவ்வாறு தடுப்பது?

> வைரஸ் பரவலைத் தடுக்கும் வழிகளில் முதன்மையானது சுற்றுப்புறத் தூய்மை ஆகும்.

> வைரஸைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து பூச்சிக்கொல்லி தெளித்தல்.

> கால்நடைகளின் கழிவுகள் மற்றும் குப்பைகளை முறையான வழிகளில் அகற்றுதல்.

> திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுத்தல்.

> ஈக்களும் கொசுக்களும் அமர்ந்த உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் நன்கு கழுவிய பிறகே பயன்படுத்துதல்.

> சுவர்களில் உள்ள துளைகள், இடுக்குகள், மரப்பொந்துகள், கோசாலைகள், கால்நடை வளர்க்கும் இடங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் சேமித்து வைக்கும் இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தல்.

> உடலை முழுமையாக மூடும் ஆடைகள், பூச்சி விரட்டிகள்  மற்றும் கொசுவலைகளைப் பயன்படுத்துதல்.

இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள்

2003-ம் ஆண்டில் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் 183 பேர் உயிரிழந்தனர். 2004-ம் ஆண்டில் குஜராத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2006-ம் ஆண்டில் தெலங்கானாவின் வாராங்கல் பகுதியில் 49 பேர், நாக்பூரில் 39 பேர், 2026-ஆம் ஆண்டில் இதுவரை 22 பேரும் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT