ஆம்பூர் அருகே விஜயநகர காலத்தைச் சேர்ந்த 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி தலைமையில், ஆங்கில துறை பேராசிரியர் மதன்குமார், காணிநிலம் முனுசாமி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் காமினி, வாணியம்பாடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் சமீபத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த 2 நடுகற்களை கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் க.மோகன்காந்தி கூறும்போது, ‘‘கடந்த 15 ஆண்டு காலமாக எங்களின் ஆய்வு குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்களை தேடி பயணித்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில். ஆம்பூர் வட்டம் அரங்கல் துருகம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிரே உள்ள மத்தூர் கொல்லைக்கு செல்லும் இடதுபுறம் உள்ள விவசாய நிலத்தில் புதையுண்ட நிலையில் 2 நடுகற்களை நாங்கள் கண்டறிந்தோம்.
இந்த 2 நடுகற்களும் விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை ஆகும். ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதிகளில் நடைபெற்ற போர்களை இந்த நடுகற்கள் எடுத்துரைக்கின்றன. போரில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். வீரர்களோடு அவரது மனைவிகளும் உடன்கட்டை ஏறி உயிர்விட்ட நடுகற்களாய் இவை காட்சி தருகின்றன.
முதல் நடுகல்லானது 4 அடி அகலம் கொண்ட பெரிய பலகை கல்லில் புதையுண்ட நிலையில் இரண்டடி மட்டுமே தரைக்கு மேலாக காட்சியளிக்கிறது. எந்த ஒரு வழிபாடும் இக்கல்லுக்கு இல்லை. வீரனின் இடது கையில் பெரிய வில் ஒன்று உள்ளது. வலது கையில் அம்பை எய்யும் கோலத்தில் வீரன் உள்ளார். வலது தோள்பட்டையின் பின்புறம் அம்புகளை வைத்திருக்கும் அம்புக்கூடு ஒன்றுள்ளது. பெரிய மீசை, இடதுபுறம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் அந்த வீரன் காட்சி தருகிறார்.
வீரனின் வலது பக்கத்தில் ஒரு பெண் உருவமும் உள்ளது. இடது கையை மேலே தூக்கியவாறும், வலது கையில் கள் குடம் ஒன்றை ஏந்தியபடியும் இந்த பெண் காட்சி தருகிறார். வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் இச்சிற்பம் உள்ளது. இப்பெண் வீரனின் மனைவியாவார். வீரன் உயிரிழந்தவுடன் தானும் தனது கணவரோடு உடன்கட்டை ஏறிய வீரமங்கைக்கும், வீரனுக்கும் எடுக்கப்பட்ட நடுகற்களாகும்.
இரண்டாவது நடுகல்லும் 4 அடி அகலத்தில் மண்ணில் புதையுண்ட கோலத்திலேயே உள்ளது. இடதுபுறம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் 2 கைகளிலும் பெரிய போர்வாளை ஏந்திய கோலத்தில் வீரன் காட்டப்பட்டுள்ளார். வீரனின் வலது பக்கத்தில் அவரது மனைவி இடது கையை தூக்கிய கோலத்தில் வலது கை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார். வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையோடு இப்பெண் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்விரு நடுகற்களும் ஆம்பூர் பகுதிகளில் நடைபெற்ற போரினை நினைவு படுத்துகின்றன. தனது நாடு அல்லது ஊருக்காக போரிட்டு தனது உயிரை விட்ட வீர மறவர்களுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வண்ணம் அவ்வூர் மக்கள் நடுகற்கள் வைத்து தெய்வங்களாக போற்றியுள்ளனர். இன்றைக்கு இந்த நடுகற்களானது போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இவற்றை, மாவட்ட தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்” என்றார்.