மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் ‘மேன் பீ சவுக்கிதார்’ என்ற ஸ்டாண்ட் அப் காமெடி வீடியோ ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறது. யூடியூபில் பதிவேற்றப்பட்ட ஒரு வாரத்துக்குள் 10 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது..
“எடுத்தோம் கவிழ்தோம்னு எல்லா முடிவுகளையும் மேலே இருக்கிற பெருந்தலைவர்’…. (நக்கலான சிரிப்போடு சில நொடிகளுக்கு மவுனம்) எடுப்பதாகப் பலர் விமர்சிக்கிறாங்க.
ஆனால், நான் அவர் எல்லாவற்றையும் கவனமாகத் திட்டமிட்டு செய்றார்னுதான் நினைக்கிறேன்” என்று தொடங்கி “அவரிடம் சமர்ப்பிக்கப்படுற பட்டியல் ஆங்கில எழுத்துகள் வரிசைப்படிதான் இருக்கும்.
அதுல அவரு எப்பவுமே முதல் பெயரைத்தான் தேர்ந்தெடுப்பார்.” ‘அமித், அதானி, அம்பானி, அர்னாப்’ என்று ஒவ்வொருவரையும் சொல்லி அரசியல் அங்கதத்தில் அடித்து நொறுக்குகிறார் அஜீம் பனத்வாலா.
நமட்டுச் சிரிப்பும் அலட்டல் இல்லாத உடல்மொழியும் டைமிங் சென்ஸோடு கலந்த அரசியல் நையாண்டித்தனமும் அருவி மாதிரி கொட்டுகிற தங்குதடையற்ற ஆங்கிலப் பேச்சும் அஜீம் பனத்வாலாவின் முத்திரைகள்.
தன்னுடைய புத்தி சாதுர்யமான நகைச்சுவை மழையில் சென்னை, கோவை முதல் சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியாவரை பலரை நனையவைத்திருகிறார் இந்த மும்பை இளைஞர். இணைய நிறுவனமொன்றில் ‘EIC Outrage’ என்ற செய்தி அடிப்படையிலான காமெடி நிகழ்ச்சியின் எழுத்தாளர், ‘கிரியேட்டிவ் டைரக்டர்’ இவர்.
சொல்லி அடிக்கிறது ஒரு வகை என்றால், சூட்சமமாகப் புரியவைப்பது இன்னொரு வகை. இரண்டாவதில் அஜீம் கில்லாடி. ‘சிகை திருத்தும் பல ரகக் கலைஞர்களின் கைவரிசை’, ‘என்னுடைய மனைவியோடு சேர்ந்து என்னால ஷாப்பிங் செய்ய முடியாது’, ‘வெறுப்பேத்தும் இந்திய பைக் ஓட்டுநர்கள்’, ‘சலவை சோப் விளம்பரங்கள்’… எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் தூக்கலாக இருக்கும் ‘ஸ்டாண்ட் அப்’பில் கேலி கிண்டலைத் தூவிய பேச்சே இவருடைய பாணி.
குறிப்பாக, ‘இந்தியாவில் உள்ள முதியோர்’, ‘இந்தியா Vs பீஃப்’ ஆகியவை இவருக்கு இருக்கும் கூர்மையான சமூகப் பண்பாட்டு அரசியல் பார்வைக்குப் பாராட்டையும் கூடவே பிரச்சினையும் தேடித் தந்தவை. இஸ்லாமியர் என்பதால் கடுமையான எதிர்ப்பையும் இணைய வழித் தாக்குதலையும் சந்தித்திருக்கிறார். ஆனால், இதற்கெல்லாம் அவர் அசருவதாக இல்லை.