வாழ்வியல்

சின்ன மாற்றம் பெரிய தீர்வு 19: கேள்வியை மாற்றிக் கேள்!

அருண் சரண்யா

“தினமும் இரண்டு மணி நேரம் பாடம் படிக்கணும்னு சொன்னேன். கேட்கலே.  பிறகு ஒரு மணி நேரமாவது படின்னு சொன்னேன் அதையும் பண்ணமாட்டேன்கிறான்.  என் மகனை என்ன செய்யறதுன்னே புரியல.  இத்தனைக்கும் அவனை முதல் ராங்க் வாங்கணும்னுகூட நான் சொல்லல. ஒவ்வொரு பாடத்திலும் 50 சதவீத மதிப்பெண்ணாவது வாங்க வேண்டாமா?”

அழாதக் குறையாக ஒரு தந்தை என்னிடம் இப்படிக் கூறினார். பயிற்சி வகுப்புகளில் நான் கடைப்பிடிக்கும் உத்தியை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.  வகுப்பு நடத்தும்போதோ பயிற்சியின்போதோ செல்போன் மணி அடித்தாலோ பங்கேற்பாளர்கள் செல்போனில் பேசினாலோ  அது அனைவருக்குமே இடையூறாக இருக்கும்.

வகுப்பின் தொடக்கத்திலேயே, “எல்லாரும் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திடுங்க” என்ற சொல்லிவிடலாம்தான். ஆனால், தங்களை ஏதோ பள்ளி மாணவர்கள்போல நடத்துவதாக அவர்கள் எண்ணி எரிச்சல் படக்கூடும் (பல நேரம் பயிற்சிக்கு வருபவர்கள் அந்தந்த நிறுவனங்களின் உயரதிகாரிகளாக இருப்பார்கள்). இந்த ஒவ்வாமை வகுப்பு முழுவதுமே பிரதிபலிக்கும்.

எனவே, வகுப்பின் தொடக்கத்தில், “வகுப்பின்போது செல்போன் மணி அடித்தாலோ யாராவது செல்போனில் பேசினாலோ வகுப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?” என்று கேட்பேன். “உண்மைதான்” என்பார்கள். (மாற்றுக் கருத்து இருப்பவர்கள் மவுனமாகி விடுவார்கள்). “நீங்கள் எல்லோரும் அப்படிக் கருதுவதால் உங்கள் செல்போன்களை வகுப்பு முடியும்வரை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுங்கள் அல்லது சைலன்ட் மோடில் வைத்து விடுங்கள்” என்பேன். அனைவரும் பின்பற்றுவார்கள்.

இந்த உத்தியைத்தான் நண்பரிடம் கூறினேன். “உங்கள் மகன் எவ்வளவு நேரம் படிக்க வேண்டுமென்று நீங்கள் குறிப்பிடாதீர்கள்.  போதிய மதிப்பெண் பெற வேண்டுமென்றால் தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள்.  (ஆரம்பத்திலேயே அவநம்பிக்கையாக அவன் மிகக் குறைவான நேரத்தைத்தான் சொல்வான் என்று நினைக்க வேண்டாம்). அப்படி அவன் கூறும்போது அந்த யோசனை அவனுடையதாகி விடுகிறது.  எனவே, அவன் அதைக் கடைப்பிடிக்க மிக அதிக வாய்ப்பு உண்டு” என்றேன்.

இந்த உத்தி பலனளிப்பதாக அவர் பின்னர் கூறியபோது நிறைவாக இருந்தது. இதில்தான் சாமர்த்தியம் உள்ளது. எதிராளி என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை அவரது கருத்தாக மாற்றி விடுவது.

(மாற்றம் வரும்) | ஓவியம்: பாலசுப்பிரமணியன்

SCROLL FOR NEXT