உடல் பாகங்களில் ஆசை ஆசையாகத் தீட்டிக்கொள்ளும் டாட்டூகளையே விஞ்சிவிட்டன ‘பாடி ஆர்ட்’ எனப்படும் உடல் ஓவியக் கலை. ஒட்டுமொத்த உடலையும் வண்ணமயமான ஓவியக் கூடமாக்கி அசத்துகிறார்கள் இந்தக் காலத்து இளையோர். பார்ப்பதற்கு டாட்டூபோலவே இருந்தாலும், இது டாட்டூ வகையைச் சேர்ந்தது அல்ல. தற்காலிகமாக மட்டுமே உடல் ஓவியம் இருக்கும் என்பதால், இளையோர் மத்தியில் இதன் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உடல் ஓவியக் கலை வளர்ந்துவருவதால், வெளிநாடுகளில் ஓவியர்களுக்கும் வரவேற்பு கூடிவிட்டது. மனதுக்குப் பிடித்த ஓவியங்கள் தொடங்கி விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணம் தீட்டிக்கொள்வோர் எண்ணிக்கையும் உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
உடல் ஓவியத்துக்கு ஆதரவு இருப்பதுபோலவே எதிர்ப்பும் இருக்கிறது. உடலைத் திரைச் சீலையாக்கிப் பல வண்ணக் குவியல்களை உடலில் கொட்டுவதால் தோல் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால், உடல் ஓவியங்கள் மூலம் உலகின் முக்கியப் பிரச்சினைகளைப் பேசுவது, மனித உரிமைகளைப் பேசுவது, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவது, வெற்றிகளைக் கொண்டாடுவது, உடல் பாகங்களின் வழியே வண்ண அழகியலைப் படைப்பது என்று உலகம் முழுவதும் உடல் ஓவியக் கலை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது.