வாழ்வியல்

தலையெழுத்தை மாற்றிய பாடப்புத்தகம்!

ராஜலட்சுமி சிவலிங்கம்

ஒரு காலத்தில் ஒரே மாதிரியாக இருந்த பள்ளிப் பாடப் புத்தகங்களின் அட்டைப் படங்கள் இப்போது தலைகீழாக மாறிவிட்டன. இந்த மாற்றத்துக்கு வடிவமைப்பாளரான கதிர் ஆறுமுகமும் ஒரு காரணம். பள்ளிப் படிப்பையே தாண் டாத இவர், இன்று பள்ளிப் பாடப் புத்தகங்களை வடிவமைப்பதில் புதுமையைப் புகுத்தி வருகிறார்.

கதிரின் சொந்த ஊர் ஈரோட்டில் உள்ள அறச்சலூர். இவருக்கு படிப்பு என்றால் வேப்பங்காய். படிப்பில் நாட்டம் இல்லாததால், 9-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். சிறுசிறு கூலி வேலைகளைச் செய்து வந்த கதிர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்குச் சென்ற பிறகு படைப்பாக்கத்தின் மீது ஆர்வம் துளிர்த்தது. அங்கே துணிகளை வெட்டித் தரும் பணியில் சேர்ந்தே இதற்குக் காரணம்.

கிடைக்கும் வேலைகளைச் செய்தபடி நவீன பக்க வடிவமைப்பு, மென்பொருள் தொழில்நுட்பங்களைக் கையாளவும் கற்றுக்கொண்டார் கதிர். சென்னைக்கு வந்த பிறகு ஒரு முன்னணிப் பதிப்பகத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த அனுபவத்தில் ‘டைபோகிராபி போஸ்ட’ரை உருவாக்கும் அளவுக்கு முன்னேறினார்.  இந்த போஸ்டர்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டபோது, அது பலரது கவனத்தையும் பெற்றது. இதன் காரணமாக, தமிழ்நாடு பாட நூல்கள் அட்டைப் படத்தை வடிவமைக்கும் பணி அவருக்குக் கிடைத்தது. இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது?

“எனக்குச் சின்ன வயசுல பள்ளிக்கூட மணிச் சத்தம் கேட்டாலே பயந்து ஓடிவிடுவேன். கணக்கு புத்தகத்தப் பார்த்தாலே ஒவ்வாமை. ஆனா, இப்போ அதே புத்தகத்த டிசைன் பண்றத நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. பாடப் புத்தகத்த பார்த்தா வெறுப்பா வரக் கூடாது. அதை மனசுல வைச்சு, அட்டைய வடிவமைக்கத் தொடங்கினேன். இன்று புத்தக அட்டையைப் பார்த்து பலரும் பாராட்டும்போது மகிழ்ச்சியா இருக்கு.” என்கிறார் கதிர் ஆறுமுகம்.

கதிர் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு: https://www.facebook.com/kathir85

SCROLL FOR NEXT