எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இடி, மின்னல் என்றால் கடும் கிலி. மின்னல் வந்தவுடனே பதறத் தொடங்குவார். ‘அடுத்து இடி வருமே’ என்று அவர் உடல் நடுங்கும். அவரது வயது 35 என்பதும், அவருக்கே இரண்டு குழந்தைகள் உண்டு என்பதும் கூடுதல் தகவல்கள்.
“வெளியே சொல்ல வெக்கமா இருக்கும். அதனாலே எனக்குள்ளே அந்த நடுக்கங்களையெல்லாம் மறைச்சுப்பேன்” என்றார்.
இந்த இடத்தில் எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். ஒரு தேர்வு எழுதுவதற்காக திருப்பதியிலுள்ள ஒரு கல்லூரி விடுதியில் தொடர்ந்து ஒரு வாரம் தங்க நேர்ந்தது. மாணவர்களின் மெஸ்ஸில் உணவு வேளைக்குச் சென்று உணவு உட்கொள்ள வேண்டும். முதல் முறையாக அந்த மெஸ்ஸை நோக்கி நடந்தபோது ஆங்காங்கே மாணவர்கள் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தனர்.
‘ஏதோ பிரச்சினை’ என நினைத்துக் கொண்டேன். மாணவர்களின் முகங்கள் கோபமாக இருப்பதாகவும் தோன்றியது.
வரிசையில் முதலில் நான் உட்கார்ந்துகொண்டேன். பிறகு பிற மாணவர்கள் அடுத்தடுத்து அமர்ந்துகொண்டார்கள். எல்லோரின் எதிரிலும் தட்டுகள் வைக்கப்பட்டன. டம்ளரில் அனைவருக்கும் வெதுவெதுப்பான நீர் வைக்கப்பட்டது. அடுத்து நடந்தது அந்த விபரீதம். அத்தனை மாணவர்களும் அந்தத் தண்ணீரை வேகமாகத் தங்கள் தட்டுகளில் கொட்டினார்கள்.
‘ஆஹா இவர்கள் சாப்பிடப் போவதில்லையா? புதுவகையில் எதிர்ப்பைக் காட்டப் போகிறார்களா? நாம் என்ன செய்யலாம்’ என்றெல்லாம் யோசித்தேன். ‘பெரும் கலவரம் ஏற்பட்டால், நாம் என்ன செய்யலாம்?’ என்ற அளவுக்கு சிந்தனை உச்சத்தை எட்டியது.
அப்போது மெஸ் ஊழியர் ஒருவர் என் தட்டுக்கு எதிர்ப்புறம் ஒரு பக்கெட்டை நீட்டியபடி நின்றார். சில நொடிகளுக்குப் பிறகுதான் உண்மை விளங்கியது. தண்ணீரைத் தட்டில் கொட்டி கழுவிவிட்டு அந்த நீரை எதிரில் நீட்டப்படும் பக்கெட்டில் கொட்ட வேண்டும். இதனால் தட்டு சுத்தமாகிறது. பிறகு பரிமாறுவார்கள்.
இதை அறியாததால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் நிறைய. இப்படித்தான் நடக்காத ஒன்றை நடந்துவிடும் என்று நாம் எண்ணிப் பதறுவதும். இடி, மின்னல் பயம் கொண்டவரிடம் நான் இதைத்தான் கூறினேன். “உலகில் பல கோடி பேர்களில் ஒருவர்தான் இடி அல்லது மின்னலால் பாதிக்கப்படுகிறார்கள். நோய்கள், சாலை விபத்துகள் போன்றவற்றால் இறப்பவர்களின் சதவிகிதத்தைவிட இது மிகக் குறைவு. எனவே இதற்காகக் கவலைப்படுவது வீணானது” என்றேன். அஞ்சியவரின் முகத்தில் ஆறுதல் தென்பட்டது.
(மாற்றம் வரும்)