இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளப் பிரிவில் தமிழக வீரர் லட்சுமணன் வெண்கலப் பதக்கத்தைக் கோட்டை விட்டதால் விளையாட்டுப் பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தார்கள். ஆனால், அந்தச் சோகத்தை ஒரே நாளுக்குள் துடைத்தெறிந்துவிட்டார் தடகள வீரரான 21 வயது தருண் அய்யாச்சாமி. 400 மீட்டர் தடை தாண்டும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் தருண்.
தடகள விளையாட்டைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துபவர் கடைசிவரை அதே நிலையில் இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. 400 மீ. தடை ஓட்டப் போட்டியிலும் அதுதான் நடந்தது. போட்டி தொடங்கியதிலிருந்து தருண் ஆதிக்கம் செலுத்தவில்லை.
300 மீட்டரைக் கடக்கும்வரை 4-வது இடத்தில்தான் வந்துகொண்டிருந்தார் தருண். ஆனால், கடைசி 100 மீட்டரை மின்னல் வேகத்தில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அந்தச் சில விநாடிகளில் அவர் காட்டிய வேகம், 48.96 விநாடிகளில் இலக்கை நிறைவு செய்ய வைத்து, வெள்ளிப் பதக்கம் கிடைக்க காரணமாக இருந்தது.
அது மட்டுமல்ல, இதுவரை அவர் ஓடியதிலேயே சிறந்த ஓட்டமாகவும் இது அமைந்தது. இதற்கு முன்பு 49.45 விநாடிகள் ஓடியதே அவரது சாதனையாக இருந்தது. தடை தாண்டும் ஓட்டத்தில் 49 விநாடிகளுக்குக் குறைவாக ஓடி இலக்கை அடைந்த முதல் இந்திய வீரரும் தருண்தான். அந்த வகையில் ஆசியப் போட்டித் தொடர் அவருக்கு மறக்க முடியாதததாக அமைந்துவிட்டது.
சர்வதேசப் போட்டித் தொடரில் தருண் பெறும் இரண்டாவது பதக்கம் இது. ஏற்கெனவே 2016-ம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தொடர் ஓட்டப் பிரிவில் தருண் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது ஆசியப் போட்டியில் இரண்டாவது பதக்கம் இடம் பெற்றிருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காயம் காரணமாக போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்தார் தருண். நீண்ட ஓய்வுக்குப் பிறகு ஆசியப் போட்டியில் களமிறங்கிய அவர், வெற்றியோடு தனது கணக்கைத் தொடங்கியிருக்கிறார்.
தமிழகத்தில் திருப்பூர் அவிநாசி அருகே ராவுத்தம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தருண் அய்யாச்சாமி சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். அவருடைய அம்மாதான் தருணையும் அவரது சகோதரியையும் கஷ்டப்பட்டு வளர்த்துப் படிக்க வைத்தார். தருணின் இந்த வெற்றியால் அவரது அம்மா மட்டுமல்ல, ராவுத்தம்பாளையம் கிராம மக்களும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.