வாழ்வியல்

பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால் பொருத்தம்

வேட்டையன்

ஜம்மு: கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும் பசுங்கன்று காயமடைந்தது. தற்போது அந்த கன்றுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை இந்தியா தாக்கியது. இதன் பின்னர் பாகிஸ்தான் தரப்பில் இந்திய எல்லையோர மாநிலங்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டது.

இதில் ராஜேஷின் வீடு சேதமானது. அதோடு வீட்டில் வளர்ந்து வந்த பசுங்கன்று காயமடைந்து. அப்போது எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதல் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பதிவான கனமழை காரணமாக உள்ளூர் கால்நடை மருத்துவர்களால் ராஜேஷின் பசுங்கன்றுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில் தடையாக இருந்துள்ளது.

இருப்பினும் தனது முயற்சியினால் ராஜஸ்தானை சேர்ந்த கால்நடை மருத்துவர் தபேஷ் மாத்தூரை ராஜேஷ் அணுகி உள்ளார். அதன்பேரில் அந்த பசுங்கன்றுக்கு மருத்துவர் தபேஷ் சிகிச்சை அளித்துள்ளார். தாக்குதல் காலினை இழந்த அந்த கன்றுக்கு செயற்கை காலினை அவர் பொருத்தியுள்ளார். தற்போது அந்த ஒன்றரை வயதான கன்று வழக்கம் போல நிற்கவும், நடக்கவும் செய்கிறது.

11 ஆண்டுகளில் 500+ கால்நடைகளுக்கு செயற்கை கால்: மருத்துவர் தபேஷ் ‘கிருஷ்ணா லிம்ப்’ எனும் செயற்கை காலினை வடிவமைத்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு அவர் இதை பொருத்தி உள்ளார். இந்தியாவின் 22 மாநிலங்களில் உள்ள மாடு, குதிரை, முயல், ஆடு உள்ளிட்டவற்றுக்கு இதை அவர் பொருத்தி உள்ளார். இதற்காக விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT