புதுடெல்லி: சொமாட்டோ டெலிவரி பாய் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், வாடிக்கையாளருக்கு சரியான நேரத்தில் உணவை கொண்டு சேர்த்து பாராட்டை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மரியா என்பவர் தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாவது: சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். ஒரு நிமிடத்துக்குள் எனக்கு தானியங்கி அழைப்பு வந்தது. எனது டெலிவரி பார்ட்னர் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் வசதியாக இருந்தால் தொடரலாம் என்றும், இல்லையென்றால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சொமாட்டோவின் வெளிப்படையான இந்த அணுகுமுறை பிடித்துப்போய் ஆர்டரை உறுதி செய்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு என்னை அழைத்த அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். மேலும், ஆர்டரை பெற கீழே இறங்கி வரமுடியுமா என்று அன்பாகவும், மரியாதையாகவும் கேட்டார். நான் சரி என்று கூறி இறங்கி வந்து எனக்கான ஆர்டரை பெற்றுக்கொண்டேன்.
சொமாட்டோவின் அணுகுமுறை எவ்வளவு தனித்துவமாக இருந்தது என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியதாக இருந்தது. டெலிவரி பார்ட்னர் மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும் பசியைப் போக்க சரியான நேரத்தில் உணவை கொண்டு வந்து கொடுத்து என்னை நெகிழச் செய்துவிட்டார்.
வாடிக்கையாளர் மற்றும் டெலிவரி பார்ட்னர் ஆகிய இருவரையும் இணைக்கும் வகையில் புத்திசாலித்தனமான வடிவமைப்பு இருந்தால் யாரும் எந்த வேலையும் செய்யலாம். அதற்கு உடல் தகுதி என்பது தடையில்லை. இதற்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. சொமாட்டோ அதன் செயல்பாடுகளில் வேறுபாடு பாராமல் மாற்றுத்திறனாளிகளையும் பயன்படுத்தி வருவது குறித்து பலர் பாராட்டி வருகின்றனர்.