வாழ்வியல்

கலாமின் எண்ணங்களும் உரையாடல்களும்

ராகா

இளைய தலைமுறையைக் கனவு காணச் சொன்னார் அப்துல் கலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடுவதை விரும்பினார். இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடு முழுவதும் பயணித்து இளைய தலைமுறையினரோடு பேசினார். அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

ஒருமுறை ‘கடந்த காலத்தில் உங்களால் மறக்க முடியாத ஒரு நிகழ்வைப் பற்றிச் சொல்ல முடியுமா?’ என்று மாணவி ஒருவர் கலாமிடம் கேட்டார். அப்போது குடியரசுத் தலைவராக இருந்தார் கலாம். முன்பு ‘ஏவுகணை நாயகர்’ ஆகப் பல சாதனைகளையும் புரிந்திருந்தார். அந்தச் சாதனைகளில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளப் போகிறார் என மாணவர்கள் எண்ணினர்.

ஆனால், ‘நான் திட்ட இயக்குநராக இருந்தபோது விண்வெளிக்குச் செல்ல தயாராக இருந்த எஸ்.எல்.வி-3 ஏவுகணையின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த நிகழ்வு எனக்குப் பாடமாக அமைந்தது. தோல்வியை எப்படி வெற்றியாக மாற்ற வேண்டுமென்கிற உத்வேகம் கிடைத்தது’ என்று பதில் அளித்து ஆச்சரியப்பட வைத்தார்.

மற்றொரு மாணவர், ‘எதிர்கால இந்தியா சிறப்பாக அமைய மாணவர்களின் பங்கு என்ன?’ என்று கேட்டார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கலாம், ’ஒரு மாணவராக, வாழ்க்கையில் ஒரு இலக்கைக் குறிக்கோளாக அமைத்து, அந்த இலக்கை அடைய வரும் தடைகளை வென்று முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.

மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். விடுமுறைகளில் நேரம் கிடைக்கும்போது ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தருவதிலும், அவர்கள் இலக்கை அமைக்கவும் உதவி செய்யலாம். மரங்களை நட்டு, சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தவும் மாணவர்கள் ஒன்றுகூட வேண்டும். மாணவர்கள் இணைந்தால் சமுதாய முன்னேற்றமும் வளமான இந்தியாவும் உருவாகும்’ என்றார்.

| அக்.15 - அப்துல் கலாம் பிறந்தநாள் |

SCROLL FOR NEXT