நீலகிரி மாவட்டத்தின் குன்னூரிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது வெல்லிங்கடன் பகுதி. ராணுவக் கல்லூரியும் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டும் வெல்லிங்டனில் புகழ்பெற்றவை. குன்னூரின் சிம்ஸ் பூங்கா, டால்பின் முனை ஆகியவற்றைப் பார்வையிடுபவர்கள் வெல்லிங்டன் ராணுவ சாலையில் பயணிப்பதையும் தவறவிட மாட்டார்கள். ராணுவத்துக்குப் பெயர் பெற்ற குன்னூரில் பிரபலமான மிலிட்டரி உணவகம் ஒன்று அமர்க்களப்படுத்துகிறது.
ராமச்சந்திரா உணவகம்: சுமார் 68 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது பழமையான ராமச்சந்திரா உணவகம். விவரம் தெரிந்த சுற்றுலாப் பயணிகள் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் தவிர்க்க முடியாத உணவகம் இதுதான். 1957இல் தொடங்கப்பட்ட ராமச்சந்திரா உணவகத்தின் ஸ்பெஷல் வெல்லிங்டன் பரோட்டா!
1980களில் இந்த உணவகத்தில் வெல்லிங்டன் பரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் வடிவமைப்பிலும் வெல்லிங்டன் பரோட்டா வித்தியாசத்தைக் கொடுக்க, மற்ற பகுதிகளுக்கும் விரைவில் பரவி இருக்கிறது. வீச்சு பரோட்டா சாயலில் மெலிதான, நொறுவைத் தன்மையைக் கொடுக்கக்கூடிய மேல் பகுதியைக் கொண்டிருக்கிறது வெல்லிங்டன் பரோட்டா. இதைத் தனித்துவமாக்குவது பரோட்டாக்குள் பொதித்து வைத்துக் கொடுக்கப்படும் பொருள்கள்தான்!
நன்றாக வேகவைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்ட ஆட்டிறைச்சி, உடைத்து ஊற்றிய முட்டை, மசாலா ஆகியவற்றைப் பரோட்டாவுக்குள் பொதித்து வைத்து ‘ஸ்டஃப்ட் பரோட்டா’ போல் வாழை இலையில் பரிமாறுகிறார்கள். தொட்டுக்கொள்ள மட்டன் குழம்பு.
சிலர் பரோட்டாவுக்குக் குழம்பைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுகின்றனர். சிலரோ பரந்திருக்கும் பரோட்டாவின் மீது குழம்பை ஊற்றி ஊறவைத்துச் சாப்பிடுகின்றனர். அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்கக் காலத்தில் வெல்லிங்டன் பரோட்டாவின் அளவு இன்னும் பெரிதாக இருந்திருக்கிறது. காலப்போக்கில் அளவைக் குறைத்திருக்கிறார்கள்.
ஆவி பறக்கும் இந்த வித்தியாசமான பரோட்டாவைக் கொஞ்சமாக எடுத்துக் குழம்பில் குழைத்துச் சாப்பிட அட்டகாசமாக இருந்தது. பரோட்டாவின் நொறுவைத் தன்மை, ஆட்டிறைச்சியின் மென்மை, முட்டையின் சேர்மானம், நறுமணமூட்டிகளின் இருப்பு, குழம்பின் தொடுகை… எனப் புதுமையான அனுபவத்தைக் கொடுத்தது வெல்லிங்டன் பரோட்டா.
மிளகின் சாரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது. ‘மிலிட்டரி உணவகம்’ என்பதாலும், குன்னூரில் நிலவும் குளிர்ச்சியான சூழலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுப்பதற்கும் மிளகின் துணை உதவிபுரிகிறது. அசைவ உணவு வகைகளைக் காரமாகப் பரிமாறும் உணவகங்களை முற்காலத்தில் ‘மிலிட்டரி உணவகம்’ என்று அழைப்பது வழக்கம். ஆனால், உண்மையில் வெல்லிங்டன் பகுதியில் இருக்கும் மிலிட்டரி கட்டமைப்புக்கு அருகிலேயே செயல்படும் இந்த உணவகம்தான் ‘மிலிட்டரி ஹோட்டல்’ எனும் பெயருக்குப் பொருந்திப்போகிறது.
முழு பசியாற்ற ஒரு வெல்லிங்டன் பரோட்டாவே போதுமானது. ஒரு வெல்லிங்டன் பரோட்டாவின் விலை 270 ரூபாய். குன்னூரின் மையத்தில் மட்டுமல்லாமல் சிம்ஸ் பூங்கா அருகிலும் ராமச்சந்திரா உணவகம் கிளை பரப்பி இருக்கிறது. சுகாதாரமான கட்டமைப்பில் சுவைமிக்க அசைவ உணவு ரகங்களை இந்த உணவகத்தில் சாப்பிடலாம். உள்ளே நுழைந்ததும் உணவக வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த செய்தித்தாள் குறிப்புகள் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தன. வெல்லிங்டன் பரோட்டா மட்டுமல்லாமல் செட்டிநாடு அசைவ உணவு வகைகளும் இங்கு பிரபலம்.
பரோட்டாவைப் பொறுத்தவரை எப்போதவது சாப்பிடுவதில் தவறில்லை. பனிப் போர்த்திய குன்னூர் நகரத்தின் மையத்தில் புகழ்பெற்ற ராமச்சந்திரா உணவகத்தில் அமர்ந்துகொண்டு, வெல்லிங்டன் ராணுவப் பகுதியின் கம்பீரமான வரலாற்றைப் பேசிக்கொண்டு, வெல்லிங்டன் பரோட்டாவைச் சாப்பிடுவது இனிமையான அனுபவம்தான்!
கட்டுரையாளர், சித்த மருத்துவர்.