உடுமலை: உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்டு 38 ஊராட்சிகள் உள்ளன. அதில் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஊராட்சிகளில் தளி சாலையில் உள்ள போடிபட்டி ஊராட்சியும் ஒன்று. நகராட்சியை ஒட்டியே உள்ள ஊராட்சி என்பதால் தெருவிளக்கு, குடிநீர், மழை நீர் வடிகால், மரம் வளர்ப்பு என பல்வேறு அடிப்படை வசதிகளிலும் மேம்பட்ட நிலையில் உள்ளது. இந்த ஊராட்சியில் வீட்டு வரி விதிப்பு, குடிநீர் கட்டணம், இதர கட்டணங்கள் மற்றும் செலுத்தப்பட்ட விவரங்கள் உடனுக்குடன் பயனாளியின் செல்போனுக்கு குறுஞ் செய்தியாக கிடைக்கும் வகையில் வசதி செய்து தரபட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தன்னார்வலர்களின் உதவியால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற ஊராட்சி செயலர் ராஜ்குமாரின் செயல்பாடுகளால் இந்த ஊராட்சியின் நடவடிக்கைகள் பலரது பாராட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் ஊராட்சியை நாடி வருவது வழக்கம். அவ்வாறு வருவோர் பசித்தாலோ அல்லது தாகம் எடுத்தாலோ யாருடைய அனுமதியும் இன்றி பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில்களை எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி செயலர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, "எங்களது ஊராட்சி அடிப்படை கட்டமைப்புகளில் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஊராட்சி அலுவலகத்தில் இரு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானலும் எளிதில் அவற்றை திறக்கும் வகையில் உள்ளது. ஒரு பெட்டியில் பிஸ்கட் பாக்கெட்டுகளும், மற்றொன்றில் குடிநீர் பாட்டில்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனை தேவையுள்ளவர்கள் யாருடைய அனுமதியும் இன்றி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் வசதியானவர், வறியவர் என்ற பாகுபாடில்லை. இதனை மனித நேய செயல்பாடுகளில் ஒன்றாக கருதுகிறோம். அவ்வளவு தான். வாழும் வரை மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிக்கொண்டே கடந்து செல்ல வேண்டும். இது போன்ற செயலை துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம்" என்றார்.