சென்னை: சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம். அதற்கு பல காதலர்கள் வாழும் உதாரணமாக உள்ளனர். அப்படி காதலில் விழுந்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் பிரேசிலை சேர்ந்த ஒரு பெண்ணும், இந்தியாவை சேர்ந்தவொரு ஆணும்.
அவர்களது காதல் கதையை பிரேசிலை சேர்ந்த அந்தப் பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தேசம் கடந்த அவர்களது நேசத்தின் ‘லவ் ஸ்டோரி’ இப்போது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. பலரும் அந்தப் பதிவை லைக் செய்து, பாசிட்டிவ் கமெண்ட் செய்தும் பாராட்டி உள்ளனர்.
அவர்கள் இருவரும் கடந்த 2020-ல் கரோனா பரவலின்போது ஆன்லைன் மூலம் அறிமுகமாகி உள்ளனர். பிரேசிலில் உள்ள தனது காதலியை பார்க்க குஜராத்தை சேர்ந்த அந்த நபர் பிரேசிலுக்கு பயணித்துள்ளார். அப்போது தடுப்பூசிகள் கூட அறிமுகமாகவில்லை என அந்தப் பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இது எங்கள் கதை. நான் பிரேசிலை சேர்ந்தவள். அவர் இந்தியாவை சேர்ந்தவர். 2020-ல் ஆன்லைன் ஊடாக வாழ்க்கை பயணத்தில் நங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். கரோனா தடுப்பூசிகள் அறிமுகமாகாத காலத்தில் அவர் என்னை பார்ப்பதற்காக பிரேசில் வந்திருந்தார். பின்னர் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை அறிந்தோம். நாங்கள் சந்தித்த ஐந்தே மாதத்தில் திருமணம் செய்து கொண்டோம்.
எங்கள் திருமணம் பிரேசிலில் நடந்தது. அவரது குடும்பத்தினரின் ஆசியும் எங்களுக்கு இருந்தது. எனது குடும்பத்தினரும் இதற்கு சம்மதித்தனர். நாங்கள் இருவரும் வெவ்வேறு கலாச்சார பின்புலத்தை சேர்ந்தவர்கள். இருந்தாலும் எங்களது வாழ்வின் மதிப்புகள் ஒன்றே. எங்கள் காதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. எங்கள் இருவரது மனமும் ஒன்றாக கலக்க துணையாக இருந்த பேரண்டத்துக்கு நன்றி” என தனது பதிவில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். அதில் அவரது பெயர் தைனா ஷா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை மெட்டாவின் இன்ஸ்டாகிராம் தளத்தில் போட்டோ கார்டு மூலம் அவர் பகிர்ந்துள்ளார். “நாங்கள் எங்கள் பன்முக கலாச்சார காதல் கதையை பகிர்கிறோம். இதை திறந்த மனதோடு பேசுகிறோம். கலாச்சாரங்களை கடந்த காதல் மூலம் மற்றவர்களும் பன்முகத்தன்மையைத் தழுவ ஊக்குவிக்கிறோம்” என அதற்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார்.