‘ஹோபோசெக்ஸுவாலிட்டி' (Hobosexuality)... இந்தியாவின் டாப் நகரங்களில் டேட்டிங் கலாசாரத்துக்கு பழக்கப்பட்டவர்கள் மத்தியில் அண்மைக்காலமாக பிரபலமாகிவரும் ஒரு வார்த்தை. எளிமையாகப் புரியவைக்க, லிவ்-இன் உறவின் இன்னொரு வடிவம் என்று சொல்லலாம்.
குடும்பம் என்பது இந்திய சட்டப்படி, இந்திய சமூக அமைப்பின்படி தாய், தந்தை, குழந்தைகள் கொண்ட மாறாத அமைப்பு என்று கொள்ளப்படுகிறது. இந்த அமைப்புக்கு மாற்றாக, திருமணம் செய்து கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழும் லிவ்-இன் உறவுகள் இந்தியாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக அரும்பியபோது அது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
காலப்போக்கில், லிவ்-இன், தன்பாலின உறவாளர்கள் இணைந்து நடத்துவதும் குடும்ப அமைப்புதான். அவர்களும் சட்டத்துக்கும் உட்பட்ட பாதுகாப்புக்கு உரித்தானவர்கள் தான் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்கும் சூழல் உருவானது. இப்போது மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பிரபலமாகி வருகிறது ‘ஹோபோசெக்ஸுவாலிட்டி’ ரிலேஷன்ஷிப். அதென்ன ஹோபோசெக்ஸுவாலிட்டி!?. வாருங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
சமூக வலைதளங்களிலும், டேட்டிங் தளங்களிலும் இந்தப் பதம் மிகவும் பிரபலம். இந்த உறவுக்குள் வருவோர் காதல், கலவியைக் கடந்து மிக முக்கியமாக வாடகை, நிதியுதவி அல்லது மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தரத்துக்காக இணைகின்றனர். சில உறவுகள் முழுக்க முழுக்க பணத்துக்காக மட்டுமே அமைக்கப்படும். ஆனால், ஹோபோசெக்ஸுவல் உறவு என்பது பகட்டான வாழ்க்கைக்காக அல்லாது பிழைத்திருத்தலுக்காக உருவாக்கிக் கொள்ளப்படுகிறது.
‘ஹோபோ’ என்றால் நிலையான வீடு அற்ற என்ற அர்த்தம் கொண்ட ஒரு வட்டார வழக்குச் சொல். இத்துடன் செக்ஸுவாலிட்டி என்ற வார்த்தையை இணைக்கும்போது, அது இரண்டு தனிநபர்களில் ஒருவர் உணர்வுபூர்வமான நெருக்கத்துக்காகவும், இன்னொரு நபர் வாடகையில்லா வீடு, செலவை பகிர்ந்து கொள்ளுதல் அல்லது வாழ்க்கைத்தர மேம்பாடு போன்ற காரணங்களுக்காக இணைந்து வாழ்தல் என்ற பொருளைத் தருகிறது.
பெருநகரங்களில் இத்தகைய உறவுக்குள் வந்தவர்களில், திடீரென பார்த்துவந்த வேலையை இழந்தவர்கள், காதல் தோல்வியால் தவிப்பவர்கள், மெட்ரோ நகர வாடகை சுமையைக் குறைக்க விரும்புபவர்கள், சிறு நகரங்களில் இருந்து வந்ததால் ஏற்பட்ட வாழ்க்கை முறை சிக்கலை சரிசெய்ய விரும்புபவர்கள் எனப் பல ரகங்களில் இருக்கின்றனர்.
இத்தகைய உறவுகள் சுரண்டலுக்கே வழிவகுக்கும் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பும் வேளையில், அதை சோதித்துப் பார்த்த சிலர், “நிச்சயமாக சுரண்டல் இல்லை. இது எழுதப்படாத ஒப்பந்தம். ஒருவருக்கு மற்றொருவர் உதவியாக இருத்தல். சிரமத்தில் இருக்கும் ஒருவர் மீண்டெழ செய்யும் உதவி. அந்த நபர் ஸ்திரமான வாழ்க்கைக்கு செல்லும்வரை நிச்சயமாக உதவியாக இருக்கும். நம்பகத்தன்மையும் கூடியதே” என்று கூறுகின்றனர்.
இந்தியாவில் ஏன்? - இதுபோன்ற உறவு இந்தியாவில் ஏன் பிரபலமடைகிறது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெருநகரங்களில் வீட்டு வாடகை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக 2022-க்குப் பின்னர் விலைவாசி, வீட்டு வாடகை கடும் உயர்வைக் கண்டுள்ளது. இது மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கும் இளம் ஊழியர்களுக்கு அழுத்தமாகிறது. அதனால், இருவர் இணைந்து ஒரே வீட்டில் இருப்பது என்பது வாடகை சுமையைக் குறைக்கிறது.
ஏற்கெனவே இதுபோல் வேலைக்குச் செல்பவர்கள் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து பகிர்ந்து கொள்வது நடைமுறையில் இருந்தாலும், இதுபோன்ற ஹோபோசெக்ஸுவல் உறவில் பகிரத் தேவையில்லை, நன்றாக சம்பாதிக்கும் அல்லது வசதி படைத்த ‘பார்ட்னர்’ செலவை ஏற்றுக் கொள்பவராக இருப்பார். இன்னொரு நபர் தனக்கு எப்போதெல்லாம் பணம் மிகையாக இருக்கிறதோ அப்போது செலவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இருவருக்கும் இடையே கண்டிப்பாக ரொமான்ஸ் இருந்தே ஆக வேண்டுமென்பதில்லை. செலவுக்காக மட்டுமே கூட சேர்ந்து இருக்கலாம். அதனாலேயே இந்த ஹோபோசெக்ஸுவல் டேட்டிங் உறவு பிரபலமடைகிறது.
அதுமட்டுமல்லாது, திருமணத்துக்கு முன்னர் இணைந்து வாழ்தல் என்ற போக்கின் மீதான கடுமையான விமர்சனங்கள் / கலாசார காவல்கள் ஜென்ஸி, மில்லனியல்கள் மத்தியில் சற்றே நீர்த்துவிட்டதால், பெருநகரங்களில் அண்டை வீட்டில் இருப்பவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கிறார்கள் என்பது பேரதிர்ச்சியாக இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், கொத்துக் கொத்தாக லே ஆஃப் செய்யும் போக்கு இன்றளவும் நீடிக்கிறது. 2023 - 2024 இடைப்பட்ட காலகட்டத்தில் ஸ்டார்ட் அப்கள் புற்றீசல் போல் மிகுந்தன. இந்தப் பின்னணிகளில் இதுபோன்ற உறவுகளில் அடைக்கலம் புக விரும்பியும், விரும்பாமலும் சிலர் நுழைகின்றனர் என்கிறது சில புள்ளிவிவரங்கள்.
போகப் போக கசக்கலாம்: இப்படியான உறவுகள் எல்லாம் ஆரம்பத்தில் சுகமாக, சுமுகமாகத் தான் இருக்கும், ஆனால் போகப்போகவே உறவுச் சிக்கல்கள் தெரியவரும். தொடக்கப்புள்ளியாக இருவருக்கும் இடையேயான உண்மையான ஈர்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் அந்த ஈர்ப்பு வலுக்கும்போது அது நிதி ஆதாயத்துக்கானதாக மாறலாம். சில நேரங்களில் சலுகைகளை அள்ளித் தருபவருக்கு சலித்துப் போகலாம். அல்லது இருவருக்கும் இடையேயான முரண்பாடுகளால், இருவரில் ஒருவர் தான் வெறுமனமே உபயோகப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வுக்குள் தள்ளப்படலாம். அல்லது, மாட்டிக்கொண்டோமா என்று அச்சம் கொள்ளச் செய்யலாம்.
‘காதல் இல்லை இது காமம் இல்லை...' - மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற செலவுகள் அதிகமாக இருக்கும் நகரங்களில் இத்தகைய உறவுகள் அதிகமாகக் காணப்படும் சூழலில், இது குறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் கருத்து கேட்க, அவர் பல்வேறு கோணங்களில் இதனை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார்.
”சென்னை போன்ற தமிழகத்தின் சற்றே வளர்ந்த நகரங்களில் ஒப்பீட்டு அளவில் மும்பை, பெங்களூரு போன்று விண்ணை முட்டும் வாடகை இல்லை. அதனால், அதன் நிமித்தமாக ஹோபோசெக்ஸுவல் உறவுகள் இங்கே இன்னும் உருவாகாமல் இருக்கலாம். இங்குள்ள நகரங்களில் இன்னும் தனித்து வாழும் பெண்களுக்கு வீடு கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. லிவ்-இன் உறவில் இருக்கிறோம் என்று வெளிப்படையாகச் சொல்லி வீடு பெறுவதும் இங்கு சாத்தியமில்லை. இத்தகைய சூழலில் ஹோபோசெக்ஸுவல் உறவையும் அதன் நிமித்தமான சிக்கலையும் இங்கே பொருத்திப் பார்க்கக் கூடிய காலம் இதுவல்ல.
லிவ்-இன் உறவுகள் மீதே இங்கு பல கருத்துகள் உள்ளன. ‘ஒரு ஆண், எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் பெண் மூலம் உடல், பொருள் என பல வகையிலும் ஆதாயம் பெறுவதற்கான உறவே இது. அதனால், இது பெண்கள் கொண்டாடித் தீர்க்கும் சுதந்திரம் அல்ல’ என்று கூறுவோரும் உண்டு.
என்னைப் பொறுத்தவரை, திருமணம், லிவ்-இன் அல்லது வேறு எந்த வடிவிலான உறவாகவும் இருக்கட்டும். எப்போதுமே, பெண் மட்டுமே பாதிக்கப்பட்டவராக இருப்பதில்லை. பெண் பாதிக்கப்பட்டால் அதை முறையிடுவதற்கும், அது கவனிக்கப்படுவதற்கும் இருக்கும் வாய்ப்பு ஆண்களுக்கு இல்லாமல் இருக்கலாம். பல ஆண்டுகள் லிவ்-இன் உறவில் இருந்த ஒரு பெண் தனது துணையை எந்தவொரு வலுவான காரணமும் சொல்லாமல் பிரிந்த கதைகளும் உண்டு. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களும் உண்டு.
பொதுவாகவே உறவுச் சிக்கல் என்று வரும்போது இந்தச் சமூகம் ஆண் / பெண் யார் என்றாலும் இரக்கமில்லாமல் தான் பல்வேறு கட்டுப்பாடுகளையும் சுமத்துகிறது. அதனால், ஹோபோசெக்ஸுவல் போன்ற புதிய உறவுகளிலும் பொதுப்படையான கருத்துகளை முன்வைத்துவிட முடியாது. இத்தகைய உறவுகள் ஏற்புடையதாக இருப்பது அதில் ஈடுபடும் இரண்டு தனிநபர்களின் மனமுதிர்ச்சி, மனிதநேயம் சார்ந்தது. ஒருவர் மட்டுமே ஆதாயம் பெறும் விதமாக, இன்னொருவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் நீடிக்கும் எந்த உறவுமே சரியானது அல்ல. அது சுரண்டல் தான். எனவே உறவுகளின் மீதான நியாயத்தை இரண்டு தனி நபர்களே தீர்மானிக்க முடியும். எந்த உறவையும் இதுதான் சரியானது, இது ஏற்கவே முடியாதது என்று நான் முத்திரை குத்த விரும்பவில்லை” என்றார்.
சமூகமும், பொருளாதாரம் இந்த நவீன காலத்தில், ‘காதல் இல்லை... இது காமம் இல்லை... இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை’ என்று நா.முத்துகுமார் ஒரு பாடலில் எழுதியிருப்பது போல் பல்வேறு உறவுகளுக்கும் வழிக்கோல் இட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதில் லேட்டஸ்ட் தான் இந்த ஹோபோசெக்ஸுவல் உறவு.