திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அன்னம்புத்தூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: “அன்னம்புத்தூர் ஏரிக்குள் சன்னியாசி மேடு பகுதி மீது உள்ள கருங்கல்லில் தனிச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதனை சன்னியாசி சாமி என கிராம மக்கள் வணங்குகின்றனர். இந்த சிற்பத்துக்கு உரியவர் ஐயனார். பிரம்மாண்டமான தலை அலங்காரத்துடன், இடைக்கச்சை அணிந்து காணப்படும் ஐயனாரின் இடுப்பில் குறுவாள் இருக்கிறது. காதுகள், மார்பு, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையை முழங்கால் மீது வைத்தும், இடது கையை தொடை மீது வைத்தும் வலது காலை குத்திட்டும், இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார்.
வழக்கமான ஐயனார் சிற்பங்களில் காணப்படும் பூரணி பொற்கலை மற்றும் அவரது வாகனம் உள்ளிட்டவை இச்சிற்பத்தில் காணப்படவில்லை. அந்த வகையில் காலத்தால் முற்பட்ட சிற்பமாக இருக்கலாம். இதன் காலம் கி.பி 7-ம் நூற்றாண்டு. 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட ஐயனார் சிற்பங்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள ஐயனார் சிற்பம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.
அன்னம்புத்தூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக பல்லவர் கால ஆவுடையார் ஒன்று காணப்படுகிறது. மேலும் இதே காலத்தைச் சேர்ந்த கொற்றவை, விநாயகர் சிற்பங்கள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ள சிவாலய வழிபாட்டில் இருக்கிறது. மேலும் சிவாலய வளாகத்தில் உள்ள ராஜராஜசோழனின் கல்வெட்டுகள் மூலம், இவ்வூர் பிரம்மதேயமாக இருந்ததையும், அன்னப்புத்தூர் எனும் பெயர் அப்போதே வழங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.
பல்லவர் காலத்திலும், அதைத்தொடர்ந்து சோழர் காலத்திலும் அன்னம்புத்தூர் கிராமம் சிறந்து விளங்கியது என்பதை இங்கிருக்கும் வரலாற்று தடயங்கள் நமக்கு உணர்த்துகின்றன” என தெரிவித்துள்ளார்.