வாழ்வியல்

‘நாடோடிகளாக திரிந்த நாங்கள் இப்போது...’ - பிள்ளைகளுக்கு சாதிச் சான்று கோரும் 10+ குடும்பத்தினர்

க.ரமேஷ்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பெலாந்துறை வாய்க்கால் கரை ஓரம் பூம்பூம் மாட்டுக்கரர்கள் எனப்படும் இந்து ஆதியன் சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்.

இவர்கள், தங்களுக்கு குடி மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மனு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் அவர்களுக்கு ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம் பட்டு கல்லுமேடு பகுதியில் மனைப் பட்டா வழங்கப்பட்டது. இவர்கள் தற்போது அதில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இவர்கள் தற்போது தொழிலை மாற்றிக்கொண்டு விவசாய வேலை, கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். இக் குடும்பத்தினரின் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அருகில் உள்ள பகுதியில் இருக்கும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பழங்குடியின இனச் சான்று இல்லாததால் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியாமல் உள்ளனர்.

கடந்த சில மாதங்ளுக்கு முன் இப்பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். இதுவரையிலும் சாதிச் சான்று கிடைக்கவில்லை. அரசு தங்களது குழந்தைகளின் நலன் கருதி சாதிச் சான்று வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி ஆதியன் சமூக மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

“பழங்குடியினச் சான்று பெற முடியாதால் அரசின் பல சலுகைகளை எங்களால் பெற முடியவில்லை. இந்த தலைமுறையில்தான் எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கியிருக்கின்றனர். நடோடிகளாக திரிந்த நாங்கள் இப்போதுதான் ஒரு இடத்தில் இருந்து, கூலி வேலை செய்து வாழ்க்கையைத் தொடர்கிறோம். எங்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்” என்று இப்பகுதியில் உள்ள இந்து ஆதியன் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT