வரதட்சிணை கொடுமையால் உயிரிழப்புகள் ஏற்படுவது நம் நாட்டில் அரிதான நிகழ்வொன்றும் அல்ல. அது ஊடகத்தின் ‘பிரதான கவனம்’ பெறுவதுதான் அரிதான நிகழ்வு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருமணமான 4-ம் நாளில் 24 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கும், 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ரிதன்யா தற்கொலை செய்யப்பட்டதற்கும் இந்தச் சமூகம் ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே மாதிரியான அக்கறையோடு கருத்துகள் தெளிக்கப்படவில்லை.
எதிலும் அரசியல் என்பதுபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் எதற்கு அதிக கவனம் என்பதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பெண் என்றாலே பெரும் அரசியல்தான். 100+ சவரன் நகை என்பதால் கேரளத்து விஸ்மயாவையும், தமிழகத்து ரிதன்யாவையும் ஹைலைட் செய்துவிட்டு வெறும் 1 பவுன் நகை என்பதால் திருவள்ளூர் மகேஸ்வரியை துணுக்குச் செய்தியாக்காமல் இருப்போம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு உட்பட்ட நடக்கும் ஒவ்வொரு வரதட்சிணைக் கொடுமையையும் அதே முக்கியத்துவதோடு அணுகும்போது சமூகத்தில் அது அடிக்கடி பேசப்படும் பொருளாகும். வரதட்சிணைக் கொடுமைகளில் ஈடுபட நினைப்போருக்கு சமூகப் பார்வை நம் மீது இருக்கிறது என்று உள்ளூர ஓர் அச்ச உணர்வு ஏற்படக் கூடும் என்ற அக்கறையை பதிவு செய்து கொண்டு, ‘வரதட்சிணை கொடுமைக்கு பெண்கள் ‘பலி’ ஆக பெற்றோரும் காரணமா?’ என்ற வாதத்துக்கு நகர்வோம்.
ரிதன்யாவும் பெற்றோரும்.. - “மாற்று வாழ்க்கையை அமைப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. என் பொண்ணு ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லி இறந்துட்டா. அதுல எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. பெண்ணை இழந்தால் கூட. அதேமாதிரி எல்லா பொண்ணும் இருக்கணும்னு நான் நினைக்கல. வாழுறதுக்கு வழி இருக்கு. வாழலாம். தன் வாழ்க்கைய மாய்ச்சுதான் இந்த உலகத்தைவிட்டுப் போகணும்னு முடிவெடுப்பது தவறுதான்” - சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் ரிதன்யாவின் தந்தை பேசிய வீடியோவில், அவர் இவ்வாறு கூறுவது பதிவாகியுள்ளது.
அவரது இந்தப் பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது. உண்மையில் ஓர் அரதப் பழசான, ஆணாதிக்கம் தடித்த வாக்கியம் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம். எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர், 12-ம் வகுப்பு படிக்கும் மகளின் திருமணம் பற்றி அடிக்கடி கனவுகளோடு பேசுவார். “என் மகளுக்கு 300 பவுனாவது நகை போட்டு, ஜாம் ஜாம்னு திருமணம் செய்ய வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார். அவர் 40+ இளைஞர்தான். படித்தவர். வியாபாரத்தில் வெற்றி கண்டவர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி விசிட் கொடுப்பவர். செல்போன் முதல் கார் வரை எல்லாவற்றையும் லேட்டஸ்டாக அப்கிரேட் செய்பவர். ஆனால், அவர் வரதட்சிணை ஐடியாலஜியை மட்டும் சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை.
அதாவது, அவரது வெற்றியும், கவுரவமும் மகளின் திருமணத்தை எவ்வளவு பகட்டாகச் செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று நம்புகிறார். அல்லது, அவ்வாறு நம்ப இந்தச் சமூகத்தால் பழக்கப்படுத்தப்பட்டுள்ளார். 5 பவுனோ, 500 பவுனோ மகளை கல்யாணச் சந்தையில் வியாபாரம் செய்துவிடுவதுதான் தகப்பனின் தலையாயக் கடமையாக இருக்கிறது. இதில் ரிதன்யாவின் தந்தையோ, மகேஸ்வரியின் தந்தையோ விதிவிலக்கல்ல.
மகளுக்கு வரதட்சிணை கொடுப்பது ஒரு குற்றம் என்று புரியாமலேயே அதை ஊக்குவிக்கும் அனைத்து பெற்றோருமே வரதட்சிணை மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் தான். வரதட்சிணை கொடுப்பது குற்றம் என்பதால், வரதட்சிணை மரணங்கள் நிகழும்போது பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்வதும் வழக்கத்துக்கு வர வேண்டும். மகளை தொலைத்த துயரத்தில் இருப்பவர்களுக்கா? என்று கேட்காமல், இதை ஊக்குவிக்க வேண்டும்.
பெண்ணின் பெற்றோர்கள் எப்படி வரதட்சிணையை தங்களின் பெருமித அடையாளமாகக் கருதுகிறார்களோ, ஆணின் பெற்றோர்கள் வரதட்சிணையை அவர்களின் உரிமையாகக் கருதுகிறார்கள். அந்த வகையில், வரதட்சிணைக் கொடுமைகளுக்கு பெருங்காரணம் ஆணின் பெற்றோர் தான் என்றால் அது மிகையாகாது. தங்கள் மகனை எத்தனை பணத்துக்கு வியாபாரம் செய்யலாம் என்று கணக்குப் போடுபவர்கள் அவர்கள்தான். வரதட்சிணை கேவலம் என்று எந்த ஆண் மகனின் பெற்றோரும் அவரிடம் சொல்வதாகத் தெரிவதில்லை. மாறாக “உனக்கு இருக்கும் அழகுக்கும், சம்பாத்தியத்துக்கும்.. ” என்று கல்யாணச் சந்தையில் தன்னை ஒரு “பிராண்டாகக்” கருதப் பழக்குவதே ஆணின் பெற்றோர்கள் தான்.
திருமணத்துக்கான தகுதி என்பது பெண்ணை இணையராக நடத்தும் பக்குவம் மட்டுமே. இதை எத்தனை பெற்றோர் ஆண் பிள்ளைக்கு சொல்லி வளர்க்கிறார்கள். அப்பா, அண்ணன், அக்கா / தங்கையின் கணவர் எப்படி வாழ்க்கைத் துணையை நடத்துகிறார்களோ அப்படியே தனக்கு வரும் பெண்ணையும் அணுகுவது அவனுக்கு இயல்பானதாக இருக்கிறது. மேலும், மனைவி என்றால் நம் பாலியல் தேவைக்கான நுகர்பொருள் என்ற போக்கும் குடும்பங்களில் ஊக்குவிக்கப்படுகிறது. பெண்ணின் மனது என்னவென்பதை தாராளமாக வெளிப்படையாக தாய் தன் மகன்களிடம் பேசலாம்.
குற்றாச்சாட்டுகளை சுமத்தும் முன்... - ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம் எல்லாம் 27 வயதான, கல்லூரி படிப்பு முடித்த, கார் ஓட்டத் தெரிந்த, தந்தையின் தொழிலை நிர்வகித்து பழக்கமுள்ள, வசதியாக வளர்ந்த பெண்ணின் மனதில் பதிவாகிறது என்றால், அதற்கு குடும்பச் சூழலும் தூபம் போடாமல் இருந்திருக்க முடியாதல்லவா? ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு இயல்பாகக் கடத்தப்பட்டுவிடும். சிலர் மட்டுமே கல்வி, வாசிப்பு என்ற சிறகை விரித்து தேவையற்றதை விட்டொழிப்பார்கள், இல்லை குடும்பத்துக்கே புரிய வைப்பார்கள்.
ரிதன்யாவுக்கு என்ன மாதிரியான பழக்கவழக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டன என்பது வெளியில் இருந்து இந்த தற்கொலை விவகாரத்தை அணுகும் நமக்கு முழுமையாகத் தெரியாது என்றாலும் கூட மகளின் மரணத்துக்கு அவர் சொன்ன காரணத்தை உயர்த்திப் பிடிக்கும் தந்தையின் பேச்சு பிற்போக்கானது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும் கூட. அதேவேளையில் தற்கொலை முடிவு தவறானது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை ரிதன்யாவின் தந்தை கூறியுள்ளார். மறுமணம் அவரவர் விருப்பம் என்பதிலும் உடன்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்தும் முன்னர் அவருடைய இந்த நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டுவது அவசியம்.
நமக்கு நாமே... - பெண் சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் தானமாகக் கொடுப்பது அல்ல. இந்தா வைத்துக் கொள் என்று யாரும் நமக்கு பொட்டலம் கட்டிக் கொடுக்க மாட்டார்கள். பெண் சுதந்திரத்துக்கான பெரிய திறவுகோல் கல்வி. கல்லூரிக் கல்விவரை இன்றைய பெண்கள் கற்பது எளிதாகவே வசப்படுகிறது. கல்லூரியில் நீங்கள் என்னப் பாடம் வேண்டுமானாலும் படியுங்கள், ஆனால் அங்கேயும் சென்று பணக்காரர்களாக திரள்வது, ஊர்க்காரர்களாக திரள்வது, சாதிக்காரர்களாக திரள்வது என்று சுருங்காதீர்கள்.
பாடப் புத்தகத்தைத் தாண்டி வாசியுங்கள். சினிமா, பொழுதுபோக்கு தாண்டி அரசியல் பேசுங்கள். இன்னமும் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்று கூடத் தெரியாமல் பட்டம் பெறும் மாணவிகள் உள்ளனர். நீங்கள் பெறும் பட்டம், திருமணப் பத்திரிகையில் பதிவு செய்வதற்காக மட்டுமே இருக்குமாயின் நீங்கள்தான் வேண்டி விரும்பி அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். பணம் சம்பாதிக்கத் தேவையில்லை என்றாலும் பணிக்குச் செல்லுங்கள். நட்பு, வாசிப்பு, பணியிடம் என பயணப்படும்போது வாழ்க்கையில் தெளிவு பிறக்கும்.
பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி குறைந்த பட்ச அறிவாவது பெண்களுக்கு இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு இந்தச் சட்டங்கள் பற்றிய கையேடுகளைக் கொடுக்கலாம். அது பற்றிய விவாதங்களை ஊக்குவிக்கலாம். பெற்றோர், சமூகம், கல்வி நிறுவனங்கள் தாண்டி பெண்கள் தங்களுக்காக நிற்க வேண்டும்.
ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பழமொழி எழுதப்பட்ட கால, சூழல் வேறு. அதற்கான களமும் வேறு. ஆனால், வெகு நிச்சயமாக பெண்களுக்காக பொருத்திப் பார்க்கலாம்.
நீங்கள் உங்களுக்கான சுதந்திரத்தை யாராவது கொடுப்பார்கள் என்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தால், யாரும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்காகப் போராட உங்களைவிட மிகத் திறமையானவர், தகுதியானவர் யாரும் இருக்க முடியாது. எந்தச் சூழலில் மீண்டெழ கல்வி அவசியம். அதை வாழ்க்கைக்குமானதாக மாற்றிக் கொள்வது உங்கள் வசம். இப்போது அதை செய்யாவிட்டால், எப்போது செய்யப்போகிறீர்கள் பெண்களே..!
இது ஒரு கூட்டுப் பொறுப்பு: இங்கே சமூகத்தையும், பெறோரையும் பெண் சுதந்திரத்தை மதியுங்கள் என்று அறிவுரை சொல்லும் அதேவேளையில் ஆண்களுக்கும் முக்கியமாக சில அறிவுறுத்தல்கள் உள்ளன. எத்தனை காலம் தான் நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களாக, வரதட்சிணைக் கொடுமை செய்பவர்களாக, பெண் அடிமைத்தனம் செய்பவர்களாக, குடும்பத்தின் கவுரவத்தை பெண்ணின் தலையில் சுமத்துபவர்களாக இருப்பீர்கள். கொஞ்சமேனும், வெட்கப்பட மாட்டீர்களா? சிறிதளவேனும் உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்த மாட்டீர்களா?.
உங்கள் கல்வியை சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாது சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் பயன்படுத்தும் வகையில் கற்றுக் கொள்ளுங்கள். பள்ளி, கல்லூரி, பணியிடம் என்று பாலின சமத்துவத்தை மதியுங்கள். அதுவே இல்வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும். படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள், எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? டிரீம் வெட்டிங் செய்வீர்களா? என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறா பெண்கள்.
வரதட்சிணைக் கொடுமையால் நிகழும் மரணங்களில் இவர்கள் எல்லோருமே ஸ்டேக் ஹோல்டர்ஸ்தான். இதனை ஒழிப்பதென்பது சமூக கூட்டுப் பொறுப்பே!