வாழ்வியல்

கீழடி போல் வெம்பக்கோட்டையிலும் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை சுமார் 13 ஆயிரம் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனால் கீழடி போல் வெம்பக்கோட்டையிலும் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பாப்பில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குறிப்பாக வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் ஏராளமான வரலாற்று எச்சங்கள் கிடைத்தன. இதனால் அங்கு அகழாய்வு நடத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2022 செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன.

தொடர்ந்து, 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2024 ஜூன் 18-ம் தேதியும் தொடங்கப்பட்டன. கடந்த மாத்தோடு அகழாய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டு நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 3,254 பழங்கால பொருட்கள் முதல் கட்ட அகழாய்விலும், 2-ம் கட்ட அகழாய்வில் 4,660 பொருட்களும், 3-ம் கட்ட அகழாய்வில் 5,100 பழங்காலப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதோடு இங்கு நுண்கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் இதுவரை கிடைந்துள்ள பொருட்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

விருதுநகரில் அரசு அருங்காட்சியக கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு இப்பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளில் கிடைத்த பழங்காலப் பொருட்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இது போதாது. சாதாரன மக்களும், மாணவர்களும் பார்த்து அறிந்துகொள்ளவும், மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மை மற்றும் சிறப்புகளை தெரிந்துகொள்ளவும் அகழாய்வு நடத்தப்பட்ட பகுதியிலேயே தொல்பொருள் கண் காட்சி அரங்கம் அமைக்கப்பட வேண்டும்.

கீழடியில் அமைந்துள்ளது போல் வெம்பக்கோட்டையிலும் தொல்பொருள் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டால் அது விருதுநகர் மாவட்டத்து க்கு மேலும் ஒரு கிரீடமாக அமையும். இதற்கு மாவட்டத்தில் உள்ள 2 அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT