ஊர்ப்பெயரை உச்சரித்ததும் வாசனையைக் கமகமக்கச் செய்யும் சக்தி சில ஊர்களுக்கு உண்டு! அதில் கோவில்பட்டியும் ஒன்று. ஊரில் கால் வைத்ததும் எத்திசையும் பரவி இருக்கும் கடலைமிட்டாயின் வாசம், சாப்பிடச் சொல்லி நம் நாவைச் சுண்டி இழுக்கும்.
மிட்டாய் பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது. அதுவும் அந்த மிட்டாய் இயற்கைப் பொருள்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு, ஆரோக்கியத்தை மட்டுமே கொடுக்கும் என்றால், அந்த மிட்டாய்க்குப் பல்வேறு ரசிகர்கள் இருப்பார்கள்தானே! அப்படித்தான் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
ஒரு கடி கடித்ததும் நா முழுவதும் பாகாய்ப் பரவும் இன்சுவை! வறு கடலையோடு இனிப்பு வெல்லத்தின் சேர்மானம் தனித்த சுவைக்குக் காரணமாகிறது. சேர்க்கப்படும் ஏலத்தின் மணம், வாய் முழுவதும் கமகமக்கச் செய்கிறது! செரிமானத்துக்குத் தொந்தரவு செய்யாமல் நல்லூட்டங்களை மட்டுமே பரிசளிக்கும் கோவில்பட்ட கடலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடும் உண்டு.
பனைத் தொழில் செழிப்பாக இருந்த காலக்கட்டத்தில் கருப்பட்டியைக் காய்ச்சி கடலை மிட்டாய் தயாரித்து இருக்கிறார்கள். காலப்போக்கில் வெல்லப்பாகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் புழக்கத்துக்கு வந்துள்ளது. கோவில்பட்டி கடலைமிட்டாயின் தனித்த சுவைக்குக் காரணம் அந்தப் பகுதிகளில் செழிப்பாக வளரும் கடலைகள்தான் என மண்சார்ந்த குறிப்பையும் வழங்குகின்றனர் விற்பனையாளர்கள்.
செய்முறை எப்படி: கடலைகளைப் பொன்னிறம் வரும் வரை மிதமாக வறுத்துக் கொள்கின்றனர். தோல் நீக்கி இரண்டாகப் பிளந்து தயாராக வைத்துக்கொள்கிறார்கள். வெல்லத்தைக் காய்ச்சி பாகு தயாரிக்கிறார்கள். பின்பு ஆறவிட்டு மீண்டும் பாகை அடுப்பிலேற்றி லேசாகக் கொதி வந்ததும், அதில் வறுத்த கடலைகளைப் போட்டு நன்கு கிளறுகிறார்கள்.
கொஞ்சம் கெட்டியான பதத்துக்கு வந்ததும், அச்சில் வார்த்து நன்றாகத் தட்டி ஆறவைத்து, கடலைமிட்டாய்களாக வடிவம் கொடுக்கிறார்கள். கற்கண்டு தூள் மற்றும் ஏலக்காய் தூளை மேலே தூவ, நறுமணம் அந்தப் பகுதி எங்கும் பரவுகிறது. தேங்காய்த் துருவல்களைத் தூவ, கடலைமிட்டாய் முழுமை பெறுகிறது.
சதுர வடிவங்களில் கடலைமிட்டாய்கள் வலம்வருகின்றன. பாகு தயாரிக்கும் போது கொஞ்சம் பிசகு வந்தாலும், கடலை மிட்டாயின் சுவையிலும் வாசனையிலும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். தேங்காய்த் துருவலைச் சேர்க்காத கடலைமிட்டாயும் கிடைக்கிறது.
கடலை – வெல்லம்: முற்காலத்தில் நிலக்கடலையை லேசாக வறுத்துவிட்டு, வெல்லம் தூவிச் சாப்பிடும் பழக்கம் அதிகளவில் இருந்தது. நிலக்கடலையை அதிகம் சாப்பிடுவதால் ஏற்பட வாய்ப்பிருக்கும் தலைச்சுற்றல் குறிகுணம் உண்டாகாமல் தடுக்கும் பொருள் வெல்லம்தான் என்கின்றன சித்த மருத்துவ நூல்கள். நிலக்கடலையால் உண்டாகும் பித்தத்தைத் தலைத் தூக்காமல் இருக்கச் செய்ய வெல்லம் பயன்படுகிறது. அதாவது உணவு இலக்கணம் தெரிந்து தயாரிக்கப்படும் தின்பண்டம் கடலைமிட்டாய் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்குப் பரிசளிக்க...: வட மாநிலங்களில் ‘சிக்கி’ என்றும் நமது பகுதிகளில் கடலை மிட்டாய் எனவும் பெயர் பெற்ற இதற்குப் பெரும்பலன்கள் உண்டு! ஆரோக்கியத் தின்பண்டத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க விரும்புபவர்கள் கோவில்பட்டி கடலை மிட்டாய்களைப் பரிசளிக்கலாம். சிறுவயது முதலே கடலைமிட்டாய்களைப் பழக்கப்படுத்த உடலுக்குத் தேவையான நுண்ணூட்டங்கள் அனைத்தும் கிடைத்து சத்துப் பற்றாக்குறை சார்ந்த நோய்கள் ஏற்படாது.
நன்மை என்ன: புற்று நோய், இதய நோய் போன்றவற்றை வராமல் தடுக்கும் கொழுப்பு அமிலங்கள் நிலக்கடலையில் நிறையவே உண்டு என்கின்றன ஆய்வுகள். மக்னீஷியம், செம்புச்சத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. உடலுக்குத் தேவைப்படும் நார்ச்சத்தையும் கொடுக்கும் நிலக்கடலை! நல்ல கொழுப்பை அதிகரிக்க நிலக்கடலையைப் பயன்படுத்தலாம். புரதச் சத்து தேவைக்கும் கடலைமிட்டாயை நாடலாம்.
எந்தவிதமான பதப்படுத்திகளோ சுவையூட்டிகளோ சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியத் தின்பண்டம், சுமார் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். திருநெல்வேலியின் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வா போல, கோவில்பட்டியில் கடலைமிட்டாய்களைத் தயாரிக்கும் பழமையான கடைகள் இருக்கின்றன.
மற்ற ஊர்களுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் சுவை மிகுந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோவின் விலை 350 முதல் 400 வரை விற்பனையாகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய கோவில்பட்டி கடலைமிட்டாயைச் சுவைத்துவிட்டால், மீண்டும் மீண்டும் அதை மனம் அனிச்சையாகத் தேடும். அளவோடு சாப்பிடும் போது ஆரோக்கியத்தை மட்டுமே கடலை மிட்டாய் பரிசளிக்கும்.
கட்டுரையாளர், சித்த மருத்துவர். | தொடர்புக்கு: drvikramkumarsiddha@gmail.com