மதுரை: மனிதர்களை போலவே உடல் உறுப்புகள் கொண்ட உயிருள்ள விலங்குகளுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பயிற்சி பெறுவதற்கான ஆய்வகம், தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.
இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் விரைவாக நேரடி அறுவை சிகிச்சை மருத்துவ அனுபவம் பெறுவதற்காக, மனிதர்களை போன்ற உடல் உறுப்புகள் கொண்ட விலங்குகளுக்கு அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கான பயிற்சியும், அதற்கான விலங்குகள் ஆய்வகமும் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ அருள் சுந்தரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இது குறித்து டீன் கூறியதாவது: மனிதர்களை போன்ற உடல் அமைப்பை கொண்ட விலங்கு பன்றி. மனிதனை போலவே இதயம், குடல், பித்தபை, கல்லீரல், ரத்த தமனி, பித்தப்பை, சிறுநீரகம் போன்ற பல்வேறு உடல் உறுப்புகள் அமைந்துள்ளன. அதனால் பன்றிகளை பயன்படுத்தி, மனிதர்களுக்கு மேற்கொள்ளும் அறுவை சிகிச்சைகளை, அறுவை சிகிச்சை பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்கள் மேற்கொள்வர். பன்றிகளுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள், மனிதர்களுக்கு இணையான சிகிச்சையை போன்றது.
மாணவர்கள் அறுவை சிகிச்சைகளை விரைந்து கற்றுக் கொள்வதற்காக மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சிகளும், அதற்கான ஆய்வங்களும் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற விலங்குகளுக்கு மேற்கொள்ளும் அறுவை சிகிச்சைப் பயிற்சியும், அதற்கான ஆய்வகமும் இல்லை.
மதுரையில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வகத்தில் முதற்கட்டமாக பன்றிகளுக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டுமே தற்போது மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. படிப்படியாக, சிறுநீரகம், இதயம், பித்தப்பை, கல்லீரல் போன்ற பிற உறுப்புகளுக்கான அறுவை சிகிச்சை பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உயிருள்ள பன்றி அரசு வேளாண்மை கல்லூரியில் இருந்து பெறப்படுகிறது. இந்த பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் பன்றிகளுக்கு எந்த தொற்று நோயும் இருக்காது. பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான நோய் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். பரவக்கூடிய நோய் எதுவும் இருக்கக் கூடாது. இதுபோன்ற சான்றிதழ்களை கால்நடைத் துறை மருத்துவர்கள் வழங்கிய பிறகே பன்றிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு டீன் தெரிவித்தார்.
இந்த பயிற்சி மையம் மற்றும் விலங்குகள் ஆய்வக தொடக்க விழாவில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில், துணை முதல்வர் மல்லிகா, முன்னாள் டீன்கள் மருதுபாண்டியன், ரெத்தினவேலு, பொது அறுவை சிகிச்சைத் துறை தலைவர் கே.சரவணன், பேராசிரியர்கள் முத்துக்குமார், ஹேமாவதி, எஸ்.ஆர்.தாமோதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.