மதுரை: தற்போதைய சூழலில் நீர், நிலம், காற்றைப்போல் மனிதர்களின் மனதும் மாசடைந்து வருகிறது. மாசடைந்த மனதை யோகா மூலம் தூய்மைப்படுத்தலாம். இன்று யோகாவில் பட்டம் பெறுவோர் சமுதாயம் பயனடையும் வகையில் யோகாவை கற்பிக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தெரிவித்தார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 15-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதற்கு அதன் செயலாளர் ஆர்.நந்தாராவ் தலைமை வகித்தார். முதல்வர் ஆர்.தேவதாஸ் முன்னிலை வகித்தார். கல்வி அலுவலர் ஆர்.நடராஜன் வரவேற்றார்.
இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 55 மாணவ, மாணவியருக்கு யோகாவில் படிப்பு முடித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தற்போதைய சூழலில் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்துள்ளது. அதனை தூய்மைப்படுத்த அரசுத் தரப்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மனிதர்களின் மனதும் மாசடைந்து வருகிறது. மாசடைந்த மனதை யோகா மூலம் தூய்மைப்படுத்தலாம். யோகாவால் நற்பண்புகளும், நேர்மறை எண்ணங்களும் வளரும், இன்று யோகா பயிற்சி முடித்து பட்டம் பெற்றுள்ளீர்கள். உங்களுக்காக மட்டும் யோகா கற்காமல் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் யோகாவை கற்றுத்தர வேண்டு்ம்.
எனக்கு 45 வயதில் ஏற்பட்ட உடல் பிரச்சினைக்கு யோகா கற்றேன். தற்போதுவரை தினமும் 20 நிமிடம் யோகா செய்வேன். தற்போது 60 வயதிலும் உடலாலும், மனதாலும் சுறுசுறுப்பாக இயங்குவற்கு யோகாவே காரணம். அனைவரும் யோகா கற்க வேண்டும். இந்த சமுதாயம் பயனடையும் வகையில் பயிற்சி முடித்த நீங்கள் யோகாவை கற்பிக்க முன்வர வேண்டும் என்றார்.
இவ்விழாவில், அரசு ராஜாஜி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் துறை தலைவர் எம்.நாகராணி நாச்சியார், காமராஜர் பல்கலைக்கழக பொருள் அறிவியல் துறை தலைவர் அன்னராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். யோகா ஆசிரியை பொன்மணி நன்றி கூறினார்.