வாழ்வியல்

கடும் வெப்பத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுக்க பானங்கள் அருந்தலாம்: உணவு டெலிவரி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வீடுகளுக்கு சென்று உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலில் ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. அது மேலும் தீவிரமடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, பொது மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தனியார் இணையவழி உணவு சேவை நிறுவனங்களுக்காக பணியாற்றும் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் கடுமையான வெப்பம் பதிவாகலாம் எனக் கூறப்படுகிறது. அந்த தட்பவெப்ப நிலையில் நேரடியாக பணியாற்றும்போது உடலில் உடனடியாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். அதனை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.

எனவே, கட்டுமானப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக் கூடியவர்கள் அனைவரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளர்களும் முன்வர வேண்டும். அதிகாலையில் இருந்து காலை வரையிலும், அதன் பின்னர் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். அதேவேளையில் நேரடி வெயிலில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் அனைவரும் குறைந்தது 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

நீர்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆர்எஸ் கரைசல், எலுமிச்சை சாறு, பழச்சாறு, மோர், இளநீர் அதிகமாக அருந்தலாம். அதேபோன்று அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெயிலில் இருந்து விலகி நிழலில் சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்ப நிலை சீராகும். அவ்வாறு இல்லாவிட்டால் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதை உணர்ந்து ஊழியர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT