சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினர், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கர்ப்ப கால உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சார் தளத்தை உருவாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினர், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கர்ப்பகால உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சார் தளத்தை உருவாக்கியுள்ளனர். தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு சாத்தியமுள்ள மாற்றாக, ஃபைபர் ஆப்டிக்ஸ் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியை பரிசோதனை செய்து கண்டறியும் உத்தியை உருவாக்க ஒன்றிணைந்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான சிக்கலான கர்ப்பகால உயர் ரத்தஅழுத்தம் உலகளவில் அதிக எண்ணிக்கையில் கர்ப்பிணிகளையும், பச்சிளங்குழந்தைகளையும் பாதிக்கிறது. சரியான தருணத்தில் சிகிச்சை அளிப்பதையும், தாய்-சேய் இருவரின் நோயற்ற தன்மை, இறப்பு விகிதங்களைக் குறைப்பதையும் உறுதி செய்யும் வகையில், இந்த சிக்கலுக்கு குறைந்த செலவில் தொடக்க நிலையிலேயே விரைவாக தேவைப்படும் இடங்களிலேயே நேரடியாக பரிசோதனை செய்வது அவசியமாகிறது.
கர்ப்பக்கால உயர் ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் வழக்கமான நடைமுறை அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதுடன், பெரிய அளவிலான கட்டமைப்புடன் கூடிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் இந்த பரிசோதனை பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகள், வள ஆதாரங்கள் குறைந்த இடங்களில் கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. எனவே, கர்ப்பக்கால உயர் ரத்த அழுத்தத்தைக் கண்டறிய உணர்திறன், குறிப்பிட்டதன்மை, வேகம் என மூன்று வகையான சிறப்பியல்புகளுடன் எளிதில் அணுகக்கூடிய வகையில் நோயாளியை பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியும் கருவி அவசர கால தேவையாக உள்ளது.
சென்னை ஐஐடி பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் வி.வி.ராகவேந்திர சாய், டாக்டர் ரத்தன்குமார் சவுத்ரி, சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்பத்துறையின் டாக்டர் நாராயணன் மடபூசி, வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தின் நானோ உயிரித் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜிதேந்திர சதிஜா, ஸ்ரீ சக்தி அம்மா உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை-ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பாலாஜி நந்தகோபால், ராம்பிரசாத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். புகழ்பெற்ற உயிரி தொலையுணர்வு மற்றும் உயிரி மின்னணுவியல் இதழில் இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.