திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ஷங்கு என்ற சிறுவன் அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டுமென வீடியோ மூலம் விடுத்துள்ள கோரிக்கை நெட்டிசன்களின் கவனத்தை பெற்றது. அவர்கள் அனைவரும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமென சொல்ல இப்போது அது குறித்து அரசும் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
மழலை பேச்சு மாறாத சிறுவன் ஷங்குக்கு பிரியாணி என்றால் கொள்ளை இஷ்டம். இந்த நிலையில் தான் அங்கன்வாடியில் உப்புமா வேண்டாம், பிரியாணி வழங்கலாம் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
‘பிரியாணி தரணும்’ என சிறுவன் ஷங்கு சொல்கிறார். அதை வீடியோவாக பதிவு செய்த அவரது அம்மா, ‘எங்கே’ எனக் கேட்கிறார். “அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும் பொரிச்ச கோழியும் தரணும்” என ஷங்கு பதில் தருகிறார். அதை அவரது அம்மா சமூக வலைதளத்தில் பதிவிட, தற்போது அது பலரது கவனத்தை பெற்றுள்ளது.
“அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு குறித்து ஷங்கு வைத்துள்ள கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். உணவை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும்” என கேரள மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் ஷங்குவுக்கு பிரியாணி, பொரித்த சிக்கன் வாங்கித் தருவதாக அவரது அம்மா தெரிவித்துள்ளார்.