திருவண்ணாமலை: மதம் சார்ந்த திருமணங்கள், கடவுள் மறுப்பு திருமணங்கள் வரிசையில் ‘திருக்குறள் நெறித் திருமணம்’ முக்கியத்துவம் பெறத் தொடங்கி உள்ளது. திருக்குறள்களைப் படித்து, திருமணம் செய்து கொள் வதை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களும் வரவேற்கின்றனர்.
1,330 திருக்குறள்களைப் படித்து, அதன் பொருள்படி செயல்பட்டால், வாழ்வில் மேன்மை அடையலாம் என்பது சான்றோர்களின் கூற்றாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருக்குறள் நெறித் திருமணத்தைத் திருக்குறள் தொண்டு மையம் முன் னின்று நடத்தி வருகிறது.
திருக்குறள் நெறித் திருமணம் குறித்து பாவலர் ப.குப்பன் கூறும்போது, “திருக்குறள் நெறித் திரு மணத்தைக் கடந்த 10 ஆண்டு களாக நடத்தி வருகிறோம். 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருமண மண்டப வாசலிலிருந்து மணமேடைக்கு மணமக்கள் கைகளில் திருக்குறள் புத்தகத்தை ஏந்தியபடி அழைத்து வரப்படுவர். அப்போது, பேரறிஞர் அண்ணா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் வேழவேந்தனின், திருக்குறள் சிறப்புப் பற்றி 50 வரிகளுக்கு மிகாமல் எழுதிய கவிதையை வாசிப்போம்.
மணமேடையை வந்தடைந்ததும் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்படும். மெய்(உடல்), வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தையும் அடக்கி வாழ வேண்டும் என்பதே பொருளாகும். “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு’’ என திருவள்ளுவர் கூறியதை நினைவு கூறுவோம். மணமக்கள், அவை வணக்கம் செய்ததும், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்களும் படிக்கப்படும்.
மேலும், 2 பாத்திரத்தில் (சொம்பு) தண்ணீரை நிரப்பி, அதன்மீது அழகுக்காகத் தேங்காய்களை வைத்து, நீரின் சிறப்பு குறித்துத் தெரி விப்போம். அப்போது வான்சிறப்பு அதிகாரத்தில் உள்ள குறள்கள் படிக் கப்பட்டதும், மணமகன் மற்றும் மணமகள் வீடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணின் சிறப்பு குறித்து எடுத்துரைக்கப்படும். மக்கட்பேறு அதிகாரத்தில் உள்ள தாயின் சிறப்புத் திருக்குறளைக் கூறி, பெற்றோர் வணக்கம் செய்யப்பட்டதும், 2 செடிகளை வைத்து மரத்தின் சிறப்பு குறித்து விவரிப்போம்.
இதையடுத்து, செம்பொருள் நுகர்வு நல்ல கொள்கை எனக் கூறி திருமணம் நடத்தி வைக்கப்படும். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என மணமக்கள் 3 முறை கூறியதும், மணமகள் கழுத்தில் மணமகன் தாலியைக் கட்டுவார். பின்னர், நல்வழியில் பயணிக்க வலியுறுத்தி ‘நன்றின்பால் உய்ப்பது அறிவு’ எனக் கூறப்படும். மணமக்கள் மீது நெல் மற்றும் மலர்கள் தூவப்பட்டு வாழ்த்தப்படுவர். இருக்கும் இடத்திலிருந்து வீசாமல், மணமக்கள் அருகே வந்து, அவர்கள் மீது தூவி வாழ்த்துவோம்.
ஒரு நெல் மணியிலிருந்து 100 நெல் மணி உருவாகும் என்பதால் அரிசிக்கு மாற்றாக நெல் மணியைப் பயன்படுத்துகிறோம். அனைவரிடமும் அன்புடன் பழக வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி, அன்புடைமை அதிகாரத்தில் உள்ள திருக்குறள்கள் படிக்கப்படும். இதைத்தொடர்ந்து திருக்குறள் புத்தகம் மீது, அகர முதல எழுத்தாய் அமைந்தாய் போற்றி எனக் கூறி பூக்கள் தூவப்படும்.
திருக்குறளாய் வாழ்வோம் எனக் கூறி திருக்குறள் நெறி உறுதிமொழியை மணமக்கள் ஏற்றதும், திருமணச் சான்று வழங்கப் படும். மணமக்களை வாழ்த்தும் வகையில் வாழ்த்து அரங்கம் நடைபெற்றதும், விருந்தோம்பல் நடைபெறும். திருவண்ணாமலையில் இன்று (நேற்று) காலை திருக்குறள் நெறிப்படி ஹோமியோபதி மருத்து வர்கள் திருஞானசம்பந்தம் - கவுரி ஆகியோரது திருமணம் வெகு சிறப் பாக நடைபெற்றது” என்றார்.