உதகை: கோத்தர் இன பழங்குடி மக்கள் தங்கள் குல தெய்வமான கம்பட்ராயர் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களில் கோத்தர் பழங்குடியின மக்கள் கொல்லிமலை, கோத்தகிரி, திருச்சிக்கடி உட்பட்ட 7 ஊர்களில் வசிக்கின்றனர். குன்னூர் அருகே கொல்லிமலையில் கோத்தர் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனத்துடன் இரவு முழுவதும் கோவில் திருவிழா நடைபெற்றது. இவர்களது குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் திருவிழாவான கம்பட்டராயர் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படுகிறது.
இந்தப் பண்டிகையின் போது, கோத்தர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து அய்யனோர் அம்மனோர் தெய்வங்களை வழிபடுவது வழக்கம். திருவிழாவின் கடைசி மூன்று நாட்கள் வீட்டிற்குச் செல்லாமல் கோவில் வளாகத்திலேயே தங்கி பூஜைகள் செய்வதும் வழக்கம். உதகை அருகே உள்ள கொல்லிமலை கோத்தர் பழங்குடி கிராமத்தில் அய்யனோர் அம்மனோர் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
விவசாயம் செழிக்கவும், நோய்நொடி இன்றி மக்கள் வாழவும் விடிய விடிய ஆடல் பாடல்நிகழ்ச்சி நடைபெற்றது. கோத்தர் பழங்குடியினர் மக்களின் இந்த பாரம்பரிய திருவிழா நூற்றாண்டு கடந்து தற்போது வரை கலாச்சாரம் மாறாமல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.