மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதுபோல், திண்டுக்கல் அருகே சிறுமலை கிராமப் பகுதிகளில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
விவசாய பணிக்கு உதவிடும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாடுகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திண்டுக்கல் அருகே சிறுமலையில் சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களில் வேளாண் இடுபொருட்கள், விளைபொருட்களை கொண்டு செல்ல குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, விவசாயிகள் குதிரைகளை வளர்த்து வருகின்றனர். இதனால் மாட்டுப் பொங்கல் தினத்தில் விவசாயிகளுக்கு உதவிடும் குதிரைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குதிரைப் பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, நேற்று குதிரைகளை குளிப்பாட்டி, வண்ணம் தீட்டி, அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர், குதிரைகளுக்கு உணவாக பொங்கல் கொடுத்து, மேயவிட்டனர்.