மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலர்விழி. கூலித் தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். தினமும் விவசாயக் கூலி வேலை பார்த்து, அதில் கிடைக்கும் ரூ.300-ல் தனது காளையை பராமரித்து வருகிறார். இவர் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க செய்வதற்காக தனது காளையை நேற்று அழைத்து வந்திருந்தார்.
இதுகுறித்து மலர்விழி கூறுகையில், “விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறேன். நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.300 கூலி கிடைக்கும். எனது பிள்ளைகளைப்போல் ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வருகிறேன். அதற்கு செலவழிப்பதை கணக்கு பார்க்க மாட்டேன். ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வேன் வாடகை உட்பட ரூ. 10 ஆயிரம் செலவாகும். இருந்தாலும் செலவைப் பற்றி கவலைப்படுவதில்லை. என்னுடைய காளை ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும்போது என் கவலைகள் எல்லாம் பறந்து போகும். இதுவரை பங்கேற்ற போட்டியில் எனது காளை தோற்றதில்லை” என்று கூறினார்.